நீலகிரியில் திடீர் கனமழை... மண் குளிர்ந்ததால் மனமகிழ்ந்த விவசாயிகள்..!

நீலகிரி மாவட்டத்தில் யாரும் எதிர்பாராத விதமாக இன்று 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம், உலக அளவில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. மேலும், இது மேற்கு தொடர்ச்சி மலையின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் கருதப்படுகிறது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எல் நிநோ தாக்கத்தால் போதுமான மழைப்பொழிவு இல்லாமல் வறட்சி நிலவி வந்தது. நீலகிரி மலை மாவட்டமும் இதற்கு விதிவிலக்கல்ல.
தென்மேற்கு பருவமழை பொய்த்ததால், நீலகிரியில் உள்ள பல்வேறு அணைகளும் வற்றத் தொடங்கின. இதனால் குடிநீருக்கு பஞ்சம் ஏற்படும் நிலை ஏற்பட்டது. மழை வேண்டி பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு பிரார்த்தனைகள், வழிபாடுகள் மற்றும் யாக வேள்விகள் நடத்தப்பட்டன.
இன்றைய தினம் யாரும் எதிர்பார்க்காத விதமாக, நீலகிரி மாவட்டத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. ஊட்டி நகரப் பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.
முத்தோரை, பாலாடா, கப்பத்தொரை, கல்லக்கொரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்ததால், சாலைகளில் வெள்ளம் போல் நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், சில விவசாய நிலங்களிலும் அதிக மழையினால் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த திடீர் கனமழையால் நீலகிரி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
