கோத்தகிரியில் கொட்டி தீர்த்த கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி

கோத்தகிரி: கோத்தகிரியில் நான்கு மாதங்களுக்கு பிறகு, நேற்று கனமழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில், மே மாதம் முதல் வாரத்தில் ஓரிரு நாட்கள் மழை பெய்தது. தொடர்ந்து, மழை பெய்யாததால், வறட்சி நிலவியது. மேலும், 'எல் நினோ' தாக்கம் அதிகரித்த நிலையில், கடுமையான வறட்சி ஏற்பட்டது.
இதனால், கோத்தகிரி நகருக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் ஈளாடா தடுப்பனை, அளக்கரை நீராதாரம் உட்பட, அனைத்து நீர் நிலைகளும் வறண்டதால், நகராட்சி நிர்வாகம் கூடுமானவரை எல்லாரும் தண்ணீர் வினியோகித்தது.
குடிநீர் தட்டுப்பாடு பகுதிகளில் மக்கள் தங்களது தேவைக்கு ஏற்ப, பணம் கொடுத்து தண்ணீர் வாங்கினர். பெரும்பாலான பகுதிகளில், தேயிலை தோட்டங்கள் மற்றும் மலை காய்கறி தோட்டங்களில், தண்ணீர் தட்டுபாடு காரணமாக பயிர்கள் வாட்டம் கண்டன.
மேலும், விவசாய நிலங்களை உழுது தயாராக வைத்திருந்த விவசாயிகள் புதிதாக பயிர் செய்ய முடியாமல் மழைக்காக காத்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை முதல், வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், பகல், 12:00 மணி அளவில் கொட்டிய, கனமழை, 1:30 மணி வரை நீடித்தது.
கடந்த நான்கு மாதங்களுக்கு பிறகு, கனமழை பெய்ததால், நீராதாரங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து விவசாய நிலங்கள் ஈரம் கண்டுள்ளன.
குளிர்ச்சியான காலநிலை நிலவியது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.