Politics
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் மும்முனை போட்டி: என்.ஆர்.காங்., - தி.மு.க., - காங்., கட்சிகள் தயார், கம்யூ., களின் நிலை புரியாத புதிர்
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல், வேட்பாளரை அறிவிக்க காங்., தி.மு.க., தயாராகிவிட்டது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மங்கலம் மற்றும் தட்டாஞ்சாவடி இரண்டு தொகுதிகளிலும் ரங்கசாமி போட்டியிட்டு, வெற்றி பெற்றார். இதில், தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்தார். இத்தொகுதிக்கான இடைத்தேர்தல், தமிழகம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநில இடைத்தேர்தல் தேதியுடன் நேற்று முன்தினம் வெளியானது.
இடைத்தேர்தலில், மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்., - தி.மு.க., (தனித்து) த.வெ.க.,வுடன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளோடு காங்., ஆகிய மூன்று கட்சிகளும் போட்டியிட உள்ளன.
இதனால் மும்முனை போட்டி உறுதியாகியுள்ளது. வரும் செப்., 9ம் தேதி மனு தாக்கல் துவங்கி அக்., 6ம் தேதி ஓட்டுப்பதிவு, அக்., 9ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கவுள்ளது. தேர்தல் தேதி வெளியாகும் முன்பே, என்.ஆர்.காங்., வேட்பாளராக அசோக் ஆனந்தை கடந்த வெள்ளிக்கிழமை முதல்வர் ரங்கசாமி அறிவித்து விட்டார். மற்ற கட்சிகள் இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை.
அதனை தொடர்ந்து த.வெ.க., - நே.ம.க., கூட்டணியில் காங்., வேட்பாளராக விநாயகம், இண்டியா கூட்டணி உடைந்து போனதால், தனித்துள்ள தி.மு.க., சார்பில் யாரை நிறுத்தலாம் என்று நேற்று இரவு தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மாநில அமைப்பாளர் சிவா மற்றும் புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில், அமைப்பாளர் சிவா நிறுத்தப்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. அவர் இல்லை என்றால் கட்சியை சேர்ந்தவர் வேட்பாளராக களம் இறங்கலாம் என்று தெரிகிறது. தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில், போட்டியிடும் த.வெ.க., தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடாமல், காங்., வேட்பாளரை ஆதரிக்கிறது.
அதனைத்யொட்டி, நேற்று முன்தினம் டில்லியில் காங்., முக்கிய நிர்வாகிகளுடன் புதுச்சேரி காங்., தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, கார்த்திகேயன் எம்.எல்.ஏ., நேய மக்கள் கழக தலைவர் நேரு எம்.எல்.ஏ., ஆகியோர் சந்தித்து பேசி கூட்டணியை உறுதி செய்தனர்.
அதனால் நே.ம.க., வை சேர்ந்த விநாயகம் காங்., வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். தற்போது எந்த கட்சி கூட்டணியிலும் இல்லாமல் தனித்து உள்ள ம.கம்யூ., இ.கம்யூ., இரண்டு கட்சிகளும் இடைத்தேர்தலில் தி.மு.க., அல்லது காங்., ஆகிய இரண்டு கட்சிகளில் யாரை ஆதரிக்கும் அல்லது அவர்களும் வேட்பாளரை அறிவிப்பார்களா என்பது புரியாத புதிராக உள்ளது.