Politics
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை..!

தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தொகுதி வாக்காளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்றும் வகையில், அன்றைய தினம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐ.டி. நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரியும் தட்டாஞ்சாவடி தொகுதி வாக்காளர்களுக்கு அக்டோபர் 6-ம் தேதி ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும்.
1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 135B(1), (2)-ன் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விடுமுறைக்காக ஊழியர்களின் தினசரி ஊதியம் அல்லது மாத சம்பளத்தில் எந்தவித பிடித்தமும் செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆற்காடு நவாப் தந்த நிலம்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்தின் மதச்சார்பற்ற வரலாறு..!
இந்த உத்தரவு நிரந்தரப் பணியாளர்கள் மட்டுமின்றி, தினக்கூலி, ஒப்பந்த மற்றும் ஷிப்ட் அடிப்படையில் பணிபுரியும் தகுதியான வாக்காளர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தட்டாஞ்சாவடி தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் புதுச்சேரியின் வேறு தொகுதிகளில் அல்லது காரைக்கால், தமிழ்நாடு உள்ளிட்ட பிற பகுதிகளில் பணிபுரிந்தாலும், தனது சொந்த தொகுதிக்கு வந்து வாக்களிக்க ஏதுவாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
விடுமுறை வழங்க மறுப்பது அல்லது தேர்தல் விடுமுறைக்காக சம்பளத்தில் பிடித்தம் செய்வது மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட விதிகளின்படி நடவடிக்கைக்குரியதாகும் என மாவட்ட தேர்தல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
