Politics
த.வெ.க-வை கழற்றிவிட்ட கம்யூனிஸ்ட்... தனித்துக் களமிறங்கும் தி.மு.க...
‘கடந்த பொதுத்தேர்தலில் த.வெ.க ஆதரவுடன் போட்டியிட்டு இரண்டாமிடத்துக்கு வந்த எங்கள் வேட்பாளர் விநாயகத்தை, கை சின்னத்தில்கூட நிறுத்துங்கள்’ என்று டெல்லி வரை சென்று காங்கிரஸ் தலைமையிடம் கோரிக்கை வைத்தார் நேயம் மக்கள் கட்சியின் தலைவர் எம்.எல்.ஏ நேரு.

`தடதட'க்கும் தட்டாஞ்சாவடி!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் வி.சி.க-வும் த.வெ.க-வுடன் கைகோத்திருக்கும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் தனியாக வேட்பாளரை அறிவித்திருக்கிறது. அதேபோல `இந்தியா’ கூட்டணியிலிருந்து வெளியேறிய தி.மு.க-வும் தனித்துக் களமிறங்குவதால் சூடுபிடித்திருக்கிறது தேர்தல் களம்.
முடிவுக்கு வந்த காங்கிரஸ் - த.வெ.க உரசல்!
2026 புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை பா.ஜ.க கூட்டணியுடன் எதிர்கொண்ட முதல்வர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி, மங்கலம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன் பிறகு தட்டாஞ்சாவடி தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து தமிழ்நாடு, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களுடன் சேர்த்து புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தலை அறிவித்திருக்கிறது தேர்தல் ஆணையம். அந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, `தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த் போட்டியிடுவார்’ என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துவிட்டதால், பிரசாரத்தில் பிஸியாகிவிட்டனர் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர்.
அதேசமயம், `2029 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தியா... முதல்வர் விஜய்யா?’ என்று நடந்துவரும் குழாயடிச் சண்டையால், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் த.வெ.க - காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்ற சந்தேகம் நீடித்துவந்தது. இந்தச் சூழலில்தான் செப்டம்பர் 10-ம் தேதி முதல்வர் விஜய் தலைமையில் ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ உருவாக்கப்பட்டிருப்பதாக திருமாவளவன், மாணிக்கம் தாகூர், வைகோ உள்ளிட்டோர் அறிவித்தனர். அதன் மூலம் த.வெ.க-வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான உரசல் தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கிறது.
கம்யூனிஸ்ட் உருவாக்கிய நான்குமுனைப் போட்டி!
பொதுத்தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ரங்கசாமி, 10,024 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதேபோல த.வெ.க ஆதரவுடன் போட்டியிட்ட நேயம் மக்கள் கட்சி வேட்பாளர் விநாயகம் 5,483 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி சுயேச்சையாகப் போட்டியிட்ட சேது செல்வம் 3,984 வாக்குகள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றனர். அதேசமயம், இரண்டு முறை புதுச்சேரியின் முதலமைச்சராக இருந்த, இப்போது எம்.பி-யாக இருக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கம் 2,990 வாக்குகள் பெற்று நான்காமிடத்துக்குத் தள்ளப்பட்டார். புதுச்சேரி மாநிலத்தை அதிக முறை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சிக்கு, தற்போது இருப்பது ஒரேயொரு எம்.எல்.ஏ-தான். அதனால், இந்த இடைத்தேர்தலில் `மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ சார்பில் போட்டியிட்டு, சரிந்த செல்வாக்கை மீட்கப் போராடிவருகிறது காங்கிரஸ்.
அதேசமயம், ‘கடந்த பொதுத்தேர்தலில் த.வெ.க ஆதரவுடன் போட்டியிட்டு இரண்டாமிடத்துக்கு வந்த எங்கள் வேட்பாளர் விநாயகத்தை, கை சின்னத்தில்கூட நிறுத்துங்கள்’ என்று டெல்லி வரை சென்று காங்கிரஸ் தலைமையிடம் கோரிக்கை வைத்தார் நேயம் மக்கள் கட்சியின் தலைவர் எம்.எல்.ஏ நேரு. ஆனால் அங்கிருந்து எந்த பதிலும் வராததால், தற்போது பனையூரின் பதிலுக்காகக் காத்திருக்கிறார்.
இதற்கிடையில் கடந்த பொதுத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட சேது செல்வத்தை, தங்கள் வேட்பாளராக அறிவித்து `ட்விஸ்ட்’ கொடுத்தது தி.மு.க. அதேபோல தமிழகத்தில் த.வெ.க அரசுக்கு ஆதரவு கொடுத்துவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலுக்கு தங்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் சலீமை வேட்பாளராக அறிவித்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. அதன் மூலம் தட்டாஞ்சாவடி தொகுதியில் தற்போது நான்குமுனைப் போட்டி ஏற்பட்டிருக்கிறது.
“ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் கூட்டணி!”
நேயம் மக்கள் கட்சியின் தலைவர், எம்.எல்.ஏ நேருவிடம் பேசினோம். “தமிழக முதல்வர் விஜய்யுடன் தற்போதிருக்கும் அனைவரும், அவருடைய வெற்றிக்குப் பிறகு வந்தவர்கள். ஆனால் த.வெ.க வரலாற்றில் கூட்டணி என்று அறிவிக்கப்பட்ட கட்சி எங்கள் கட்சிதான். அந்தக் கூட்டணியில் போட்டியிட்ட நாங்கள், முதல்வர் ரங்கசாமியை எதிர்த்து போட்டியிட்டு இரண்டாமிடத்துக்கு வந்தோம். ஆனால், இந்தத் தேர்தலில் எங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்று ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்டவை கூட்டணி அமைத்து, எங்களுக்கு எதிரான சதிவலையைப் பின்னி வருகிறார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் த.வெ.க கூட்டணியில் இருக்கிறது. அப்படியிருக்கும்போது புதுச்சேரியில் தன்னிச்சையாகத் தங்கள் வேட்பாளரை அறிவித்துவிட்டு, `அவரை மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி வேட்பாளராக அறிவியுங்கள்’ என்று த.வெ.க-வுக்குத் தற்போது அழுத்தம் கொடுத்துவருகிறது. ஆனால், தமிழக முதல்வர் விஜய், எங்கள் வேட்பாளரைத்தான் ஆதரிப்பார் என்று நம்பிக்கை இருக்கிறது. த.வெ.க தலைவர்களுடன் பேசிவருகிறோம்” என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரும், அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளருமான சலீமிடம் இது குறித்துப் பேசியபோது, “எங்கள் கட்சியின் நகர்வுகள் அனைத்தும் மக்களுக்கானவை. அதைத் தவிர, யார் யாரோ சொல்லும் கருத்துகளுக்கெல்லாம் பதிலளிக்க விரும்பவில்லை” என்றார்.
