Politics
தமிழக முதல்வர் விஜய்க்கு ம.நீ.ம., தலைவர் கமல் கடிதம்

சென்னை: 'தமிழகத்தில் நடத்தப்படும் கிராம சபைக் கூட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டும்' என, முதல்வர் விஜய்க்கு, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து முதல்வருக்கு கமல் எழுதிய கடிதம்:
கிராம ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களின் மாத ஊக்கத்தொகையை ஊராட்சி தலைவருக்கு 16,000; துணைத் தலைவருக்கு 10,000; வார்டு உறுப்பினருக்கு 8,000 ரூபாய் என, உயர்த்த வேண்டும்.
கிராமங்களில் புதிய மதுக்கடைகள் திறக்க கிராம சபை ஒப்புதலை கட்டாயமாக்க வேண்டும். மக்களின் தொடர் எதிர்ப்பை எதிர்கொள்ளும் மதுக்கடைகளை மூட, கிராம சபை நிறைவேற்றும் தீர்மானங்களுக்கு, சட்டப்பூர்வ அதிகாரம் தர வேண்டும். சிறப்பாக நடத்தப்படும் கிராம சபை கூட்டங்களை நேரலை செய்ய வேண்டும்.
அரசின் திட்டங்களை அறிவிக்கும் இடமாக மட்டுமின்றி, குடிநீர், சுகாதாரம், சாலைகள் போன்ற, கிராமங்களின் உண்மையான தேவைகளை, மக்களே நேரடியாக தீர்மானிக்கும் வகையில், கிராம ஊரக வளர்ச்சி திட்டம் அமைய வேண்டும். உள்ளாட்சி நிர்வாகத்திடம் மக்கள் கேள்வி எழுப்பி, தங்கள் ஊரின் வளர்ச்சிக்கு, அரசை பொறுப்பாக்கும் உண்மையான தளமாக, கிராம சபை மாற வேண்டும்.
அக்., 2 அன்று நடக்க உள்ள கிராம சபை கூட்டங்களை, மேலும் வலுவானதாகவும், பயனுள்ளதாகவும் மாற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.