Politics
கிராம சபைகளை வலுப்படுத்த 8 பரிந்துரைகள் : முதல்வர் விஜய்க்கு கமல்ஹாசன் கடிதம்!

முதல்வர் விஜய்க்கு கிராம சபைகளை வலுப்படுத்த 8 பரிந்துரைகளுடன் கமல்ஹாசன், கடிதம் எழுதியுள்ளார். அக்டோபர் 2 கிராம சபைக் கூட்டங்களை வலுப்படுத்தவும், டாஸ்மாக் கடைகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிராம சபைகளை வலுப்படுத்த 8 பரிந்துரைகளைத் தெரிவித்து முதலமைச்சர் விஜய்க்கு மக்கள் நீதி கட்சி தலைவரும் எம்பியுமான கமல்ஹாசன் கடிதம் எழுதி உள்ளார்.
அந்தக் கடிதத்தில், வரும் அக்டோபர் 2-ம் தேதி நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களை, அடித்தள ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் மாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கிராம ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கான மதிப்பூதியத்தை உயர்த்த வேண்டும் என்றும்,
கிராமங்களில் டாஸ்மாக் கடைகள் அமைப்பது மற்றும் தொடர்ந்து செயல்படுவது குறித்து கிராம சபைகளுக்கு முக்கிய முடிவெடுக்கும் அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், கிராம சபை தீர்மானங்களுக்கு காலக்கெடுவுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும், கூட்டங்களின் நிகழ்ச்சி நிரலில் பொதுமக்களுக்கு அதிக பங்கு வழங்க வேண்டும், உள்ளாட்சி நிர்வாகம் தொடர்பான ஆய்வு மற்றும் பயிற்சிகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
கிராம வளர்ச்சித் திட்டங்களை மக்களின் பங்களிப்புடன் உருவாக்குவதுடன், அடித்தள அளவில் பொறுப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: "முதல்வர் பதிலுரைக்கு முன் தலைநகரில் தவெக கட்சிப் பிரமுகரே கொலை..." - சட்டம் ஒழுங்கு குறித்து உதயநிதி கேள்வி
காந்தியின் கிராம சுயராஜ்யக் கனவை நனவாக்கும் வகையில், கிராம நிர்வாகத்தில் நாட்டுக்கே முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
