தேவை அதிகரிப்பால் வாழை இலை விலை உயர்வு

ஆண்டிபட்டி: முகூர்த்த நாட்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேவை அதிகரிப்பால் ஆண்டிபட்டியில் வாழை இலை விலை உயர்ந்துள்ளது.
ஆண்டிபட்டி அருகே வைகை ஆற்றின் கரையோரங்களில் உள்ள சீரங்காபுரம், புதூர், அணைக்கரைப்பட்டி, மூனாண்டிபட்டி, தர்மத்துப்பட்டி, புள்ளிமான்கோம்பை உட்பட்ட கிராமங்களில் வாழை சாகுபடி உள்ளது.
இப்பகுதியில் விளையும் வாழை இலைகள் ஆண்டிபட்டி மார்க்கெட்டில் இருந்து மதுரை, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் முகூர்த்த நாட்களில் தேவை அதிகரிப்பால் வாழை இலை விலை திடீரென்று உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 180 இலைகள் கொண்ட கட்டு ரூ.1000 வரை விலை இருந்தது. நேற்று விலை ரூ.4000 ஆக உயர்ந்தது. சில்லறை விலையில் 5 இலைகள் கொண்ட மடி ரூ.80 முதல் 100 வரை இருந்தது.

