Politics
“என்னை சந்தித்தபோது சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்?” - மு.க.ஸ்டாலின் கேள்வி!

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை அளித்தார். அப்போது அவர், கடந்த கால திமுக ஆட்சியில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கை, வீராணம் திட்டம் மற்றும் அமலாக்கத்துறை ஆவணங்களைக் குறிப்பிட்டுத் திமுகவினர் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இதில் முதல்வர் விஜய் மிசா குறித்து பேசும் போது, திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினைச் சைகை மூலம் உருவக் கேலி செய்யும் விதமாகப் உடல்மொழி செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா காலத்தில் நடந்தவை குறித்து முதல்வர் விஜய்க்கு பதிலளிக்கும் விதமாகப் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேசிய மு.க.ஸ்டாலின், “அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத்தில் நடந்த சில சர்ச்சைகள், தமிழ் மக்களுக்கும் நம்முடைய உடன்பிறப்புகளுக்கும் கோபத்தையும் அதிருப்தியையும் உண்டாக்கி இருப்பதை நான் உணர்கிறேன். இந்த சர்ச்சையில் முக்கியமா என்னுடைய சிறை வரலாறு இருப்பதால் அதை பற்றி கொஞ்சம் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தம்பி விஜய், நீங்க சொன்னது உண்மைதான், பொய் எல்லாம் இல்லை. எமர்ஜென்சி காலத்தில் அதை எதிர்த்து கலைஞர் மெரினா கடற்கரையில் மிகப்பெரிய கூட்டத்தை கூட்டி மிசா சட்டத்தை கடுமையாக விமர்சித்ததை தொடர்ந்து, அப்போது இருந்த ஒன்றிய அரசாங்கம் 30.01.1976 அன்றைக்கு திமுக ஆட்சியை கலைத்தார்கள். ஆட்சியை கலைத்த அடுத்த நொடி மிசா சட்டத்தில் என்னை கைது செய்வதற்காக கோபாலபுரம் வீட்டுக்கு போலீஸ் வந்தார்கள். அன்று நான் வீட்டில் இல்லை. பையன் பிரச்சாரத்துக்கு போயிருக்கான், நாளைக்கு வந்துடுவான், வந்ததும் நானே போன் பண்றேன், வந்து கைது செய்யுங்கள் என்று கலைஞர் சொல்லி அனுப்பிவிட்டார். அடுத்த நாள் நான் வந்ததும், அவரே போலீசை வரச் சொல்லி கைது செய்ய சொன்னார்.
சிறையில் எனக்கு பல கொடுமைகள் நடந்தது. எங்களை தொழுநோயாளிகள் இருக்கிற இடத்தில் அடைத்தார்கள். 10 பேரை ஒரு சின்ன அறைக்குள் அடைத்தார்கள். அந்த அறைக்குள்ளேயே ஒரு பானையில் தான் அத்தனை பேரும் சிறுநீர் கழிக்க வேண்டும். அந்த இடமே ரொம்ப துர்நாற்றமாக இருக்கும். அங்கேதான் நாங்கள் தூங்க வேண்டும். இரவில் தூங்க விடாமல் போலீஸ் லத்தியால் அடிப்பார்கள், பூட்ஸ் காலால் மிதிப்பார்கள். இன்னொரு பக்கம் ஆயுள் தண்டனை கைதிகளை வைத்து எங்களை கொடூரமாக அடிப்பார்கள். அவர்கள் அடித்ததில் என் கூட இருந்த அருமை அண்ணன் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டிபாபு சிறையிலேயே இறந்து போனார். அவர்கள் அடித்ததில் என் தாடை எலும்பெல்லாம் உடைந்தது. நீங்க கூட இப்படி கை வைத்து தாடையை காமித்தீர்கள், இல்லையா அது கரக்ட் தான். இன்றைக்கும் நான் அடிவாங்கிய தலும்புகள் எனக்கு இருக்கிறது. நான் இல்லை என சொல்லவில்லை. பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு, முக்கியமா தமிழர்களுக்காகவும் தமிழ்நாட்டுக்காகவும் போராடுகிற நிறைய பேருக்கு இந்த மாதிரியான அடக்கு முறைகள் நடந்திருக்கிறது.
போராளிகள் எல்லாம் இதை தாண்டிதான் வந்திருக்கிறோம். எதிர்த்து போராடுவதும் அதனுடைய விளைவுகளை சந்திப்பதும் எங்களுக்கு ஒன்றும் புதிது இல்லை. நீங்கள் கொள்கை தலைவராக சொல்கிற அறிஞர் அண்ணா காலத்தில் இருந்து திமுகவுடைய வரலாறே இது தான். அந்த வரலாற்றில் நானும் இருக்கிறேன் என்பது எனக்கு பெருமையான விஷயம்தான். யார் என்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்றவே முடியாது. அது காலத்துக்கும் அப்படியேதான் இருக்கும். சந்தேகம் என்றால் நீங்கள் சட்டமன்றத்தில் லைப்ரேரி இருக்கிறது என்று சொன்னீர்கள் இல்லையா? அங்கே எல்லா ஆவணங்களும் இருக்கும். அங்கே போய் என்னுடைய போராட்ட வரலாற்றை நீங்க படித்து பாருங்கள், உண்மை என்னவென்று புரியும். சர்க்காரியா கமிஷன் பற்றியும் எங்கள் தலைவர் கலைஞர் பற்றியும் தவறான தகவலை பேசி இருக்கிறீர்கள். ஊழல் குற்றச்சாட்டுகளை சொல்லி இருக்கிறீர்கள். சர்க்காரி கமிஷன் அமைக்கப்பட்டதுக்கு பிறகு ஒன்றியத்தியலும் மாநிலத்திலும் பலமுறை ஆட்சி மாறிவிட்டது. இந்த குற்றச்சாட்டுகளில் ஏதாவது உண்மை இருந்திருந்தால் கண்டிப்பா நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.
இத்தனை வருடமாக அரசியலுக்காக கலைஞர் மேல் காழ்புணர்ச்சி கொண்டவர்கள் சொன்ன பொய்யான குற்றச்சாட்டை நீங்களும் சொல்லி இருக்கிறீர்கள். அதுமட்டுமில்லாமல் அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தை எடுத்து எங்கள் மேல் ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாக சொல்கிறீர்கள். அமலாக்கத்ததுறை குற்றம் சாட்டிய 95% வழக்குகளில் இதுவரைக்கும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் குற்றச்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். பெரும்பாலும் அரசியல் பழிவாங்களுக்காகவே அமலக்காத்துறை ஏவப்படுகிறது இங்கே இருக்கிற எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். உங்கள் கூட்டணியில் இருக்கிற காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மேல் கூட அமலாக்கத்துறை பல வழக்குகளை போட்டிருக்கிறது. இதெல்லாம் ஒன்றிய அரசை கொள்கை எதிரியாக சித்தரிக்கும் உங்களுக்கு எப்படி தெரியாமல் போனது? முதலமைச்சர் தம்பி விஜய் நான் உங்களிடம் கேட்பது ஒன்றே ஒன்று தான். தமிழ்நாடு சட்டமன்றத்துக்கென்று ஒரு மாண்பும் மரியாதையும் இருக்கிறது. பல பெரும் தலைவர்கள், மாமனிதர்கள் தமிழ்நாட்டை செதுக்கி நடந்தது. அந்த பொறுப்பு இப்போது உங்களுக்கும் இருக்கிறது. சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, மக்கள் நல திட்டங்கள், தமிழ்நாட்டை மேலும் மேலும் எப்படி முன்னேற்ற பாதைக்கு கொண்டு போவது, தமிழ்நாட்டுடைய உரிமைகளை எப்படி பாதுகாப்பது? இதெல்லாம் விவாதம் செய்யுங்கள். அதுதான் தமிழ்நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் நல்லது.
அதை விட்டுவிட்டு தேவையில்லாத சர்ச்சைகளை சட்டமன்றத்தில் பேச வேண்டாம் என்பது தான் என்னுடைய கோரிக்கை. நீங்கள் முதலமைச்சரானதும் என்னை சந்திக்க என் வீட்டுக்கு வந்தீர்கள். அப்போது நான் உங்கள் கரம் பிடிச்சு வரவேற்றேன். அப்போது நீங்கள் என்னிடம் தேர்தல் பிரச்சாரத்தில் உங்களை ரொம்ப விமர்சித்து பேசிவிட்டேன், ஐ அம் சாரி சார் (I am sorry sir ) என்று சொன்னீர்கள். அதற்கு நான், பரவாயில்லை பிரதர் அதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ளவில்லை, நீங்கள் இப்போது ஒரு மாநிலத்தின் முதல்வர், யாரை பற்றி பேசும் போது கண்ணியத்துடன் பேசுங்கள் என்று சொன்னேன். பிரதர் அதைெல்லாம் மனசுல வச்சுக்கல நீங்க இப்போ ஒரு மாநிலத்தோட முதலமைச்சர் யாரை பத்தி பேசும்போதும் அந்த கண்ணியத்தோட பேசுங்கன்னு சொன்னேன். அதையெல்லாம் நீங்கள் மறந்துவீட்டீர்கள் போல... ஒரு முதலமைச்சருக்கான கண்ணியத்துடைய உங்களுடைய வார்த்தைகளும் உடல் மொழியும் இருக்க வேண்டும். நாம்தான் மக்களுக்கு முன்னுதாரணம். அதை மறந்துடாதீங்க. நீங்க வகிக்கிற பெரிய பொறுப்பு உணர்ந்து நீங்கள் செயல்பட வேண்டும். சட்டசபையவே ரீல்ஸ் எடுக்கிற இடமாக மாற்றுவது, நாங்கள் கட்டின பாலத்தில் மேல் நின்று போட்டோஷூட் எடுப்பது என்று ஆட்சி நிர்வாகத்தையும் சினிமா சூட்டிங் மாதிரியே நடத்துகிறீர்கள்?. உங்களோட திறனற்ற நிர்வாகத்தை மறைக்க இப்படி விதவிதமாக ரீல்ஸ் போட்டு ஒரு தலைமுறையையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் ரியாலிட்டி என்ன? உண்மை ஊரை தாண்டுவதற்குள் பொய் உலகத்தே சுத்தி வந்துடும் என்ற ஒரு பழமொழி சொல்லுவாங்க, அதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது. உங்க ஆட்சியில் தினம் தினம் கொலை, திருட்டு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என சட்டம் முழுங்கு படுகுழியில் இருக்கிறது.
மாற்றம் வேண்டும் என்று நினைத்து வாக்களித்த மக்களுக்கு உண்மையாகவே இப்போது என்ன மாற்றம் வந்திருக்கிறது? இது சரியான மாற்றமா?. எது நிர்வாகத்தன்மை வாய்ந்த அரசு? எது திறமை இல்லாத அரசு என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கழக உடன்பிறப்புக்களுக்கு நான் வலியுறுத்த விரும்புவது என்னவென்றால், மக்கள் நமக்கு முழுமையாக ஓட்டு போடவில்லை, அதனால் நாம் ஆட்சிக்கு வர முடியவில்லை. அதனால், இந்த ஆட்சியில் நடக்கிற தவறுகளால் மக்கள் பாதிக்கப்படும் போது நமக்கு என்னவென்று இருக்கக்கூடாது. அப்படி ஒரு எண்ணம் நம் சித்தாந்தத்திலேயே கிடையாது. ஆட்சி இழப்பதை திமுக என்றைக்குமே தோல்வியாக நினைத்தது இல்லை. ஒரு நாணயத்துக்கு ரெண்டு பக்கம் இருக்கிற மாதிரி இதை மக்கள் பணியுடைய இன்னொரு முகமாகத்தான் நான் பார்க்கிறேன். ஆட்சியில் இருக்கிறமோ இல்லையோ, என்றைக்குமே தமிழ்நாட்டுடைய உரிமைக்காகவும் வளர்ச்சிக்காகவும் மக்களுக்காகவும் நாம சண்டை செய்து கொண்டே இருக்க வேண்டும். அவங்க தாத்தாவுக்காக சண்டை செஞ்சோம். அவங்க அப்பாவுக்காக சண்டை செஞ்சோம். இப்போது அவங்களுக்காகவே சண்டை செய்வோம். இதுதான் நம்ம திமுகவுடைய வரலாறு அந்த வரலாறு எப்போதும் மாறாது மாறவும் கூடாது” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)





