Politics
ராங்கால்! அணுகுண்டு வீசிய முஸ்லீம் லீக் அப்செட் விஜய்!

"ஹலோ தலைவரே, தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருப்பது, முதல்வர் விஜய்க்கு நிர்வாக நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.''”
"ஆமா, தேர்தல் பிரச்சாரத்துல கடந்த தி.மு.க. ஆட்சியை விமர்சித்துப் பேசியதுல கிடைத்த ஆதரவு அலைல வந்தவர்தானே இவர். அந்த விமர்சனத்துக்கு ஏற்றபடி தன்னோட ஆட்சியை நடத்திக்காட்ட வேண்டாமா?''”
"தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதும், சட்டம் ஒழுங்கு முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது குறித்தும் 15 நாட்களுக்கு முன்பு விரிவான ஒரு ரிப்போர்ட்டை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைத்திருக்கிறார் தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகர். இதுகுறித்து அமித்ஷாவின் மத்திய உள்துறை அமைச்சகம், விஜய் அரசிடம் கேள்வியெழுப்பியிருக்கிறது என்கிறார்கள். மத்திய அரசு ஒருபக்கம் கேள்வியெழுப்ப, மற்றொருபுறம் தமிழக எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயிருப்பதாக குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றன. இத்தகைய நெருக்கடிகள், விஜய்யைச் சூழ்ந்த நிலையில்தான், அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்கள் விஜய்க்கு மேலும் நெருக்கடியைக் கொடுக்க, தனது அரசின் உயரதிகாரிகளிடம், எங்கு தப்பு நடக்கிறது? என்று கடிந்துகொண்டிருக்கிறாராம். தனது அரசுக்கு எதிராக கவர்னர் அர்லேகர் டெல்லிக்கு ரிப்போர்ட் அனுப்பியதை ஜீரணிக்கமுடியாமல் அவரை தமிழகத்திலிருந்து அகற்ற காய்களை நகர்த்திவருகிறது த.வெ.க. அரசு என்றும் ஒரு செய்தி காதில் விழுகிறது.''”
அணுகுண்டு போட்ட ஐ.யூ.எம்.எல்.!
"இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் எம்.எல்.ஏ. சையது ஃபாரூக் பாஷா, அக்கட்சி யின் திருவண்ணாமலைக் கூட்டத்தில் த.வெ. க.வுக்கு எதிரா அணுகுண்டு வீசியிருக்காரே?''”
"முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசை காப்பாற்றிக் கொள்ள குதிரை பேரத்தில் த.வெ.க. முன்னணி அமைச்சர்கள் ஈடுபட்டனர் என்கிற குற்றச்சாட்டுகளை கடந்த 3 மாதங்களாக வைத்து வருகின்றன எதிர்க்கட்சிகள். அதனை த.வெ.க. அரசு மறுத்தேவந்தது. த.வெ.க. அரசுக்கு ஆதரவு தந்துவருவதுடன் அமைச்சரவையிலும் பங்குபெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் எம்.எல்.ஏ. சையது ஃபாரூக் பாஷா, திருவண்ணாமலையில் நடந்த அக்கட்சியின் கூட்டத்தில், ‘தேர்தல் முடிந்ததும் என்னையும் ஷாஜகானையும் தேடிவந்து 2 பெட்டிகளில் கோடி கோடியாகப் பணம் கொண்டுவந்து அமைச்சர் பதவி தருகிறோம், கையெழுத்து போடுங்கள்’ என்றார்கள். ஆட்சியைக் காப்பாற்ற குதிரை பேரம் நடந்துள்ளது என்பதற்கு இவரின் பேச்சே ஆதாரமாக இருக்கிறது என்கிறார்கள் தி.மு.க., அ.தி.மு.க. மூத்த தலைவர்கள். ஏற்கனவே குதிரை பேரத்துக்கு எதிராக கோர்ட்டுக்கு அ.தி.மு.க. போயிருப்பதால், இதுதொடர்பான விசாரணை வரும்போது, எம்.எல்.ஏ. சையதுவின் இந்த பேச்சு முக்கிய ஆதாரமாக எடுத்துவைக்கப்படும் என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். இதைப்பற்றி விளக்கம் கேளுங்கள் என ஆலோசகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் விஜய். இதனையடுத்து, ஐ.யூ.எம்.எல்.லின் அமைச்சர் ஷாஜஹானிடம் வருத்தப்பட்டு பேசியிருக்கிறார்கள் விஜய்யின் ஆலோசகர்கள். தலைமையிடம் கேட்டு இதனை எப்படி சரிசெய்வது எனப் பார்க்கிறேன் என ஆலோசகர்களிடம் சொல்லியிருக்கிறாராம் அமைச்சர் ஷாஜஹான்.''’
நிர்மல்குமாரின் புது ரூட்!
"நிர்மல்குமாருக்கு எதிராக தங்கபாண்டியன், கல்லாணை, உசிலம்பட்டி எம்.எல்.ஏ. விஜய், சாதிரீதியாக இணைந்து போர்க்கொடி தூக்கி தங்களில் ஒருவருக்கு அமைச்சர் பதவி கேட்கிறார்களாமே?''”
"நிஜம்தான் தலைவரே, ஆனா, இதற்கு எதிர் வினையாக நிர்மல்குமாரும் அதே ரூட்டைப் பிடிச்சு தென்தமிழ்நாட்டின் முக்குலத்தோர் முகமாக தன்னை காட்டிக்கொள்ள ஆரம்பித்துள் ளார். சமீபத்தில் நடந்த பூலித்தேவன் விழாவில் பங்கேற்றபோது மதுரை முதல் திருநெல்வேலிவரை அவரை முக்குலத்தோர் முகமாகக் காட்டி நிறைய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதற்கிடையில் மதுரை கிழக்கு தொகுதி கார்த்திகேயன் தனக்கு அமைச்சர் பதவி கிடைத்துவிடுமென்ற நம்பிக்கையுடன் இரு தரப்பையும் டேமேஜ் செய்துவருகிறார். குறிப்பாக மதுரை த.மா.கா. எம்.எல்.ஏ. கே.எஸ்.கே. ராஜேந்திரனின் மருமகனும், ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்யனின் சகலையுமான தினேஷைத் தான் தன்னுடைய வரவு செலவுகளையும், புதிய தொழில்களையும் கவனித்துக்கொள்ள பயன்படுத்தி வருகிறார் நிர்மல்குமார். இதனையும் அவரது எதிரணியினர் கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.''’
சர்ச்சையில் புஸ்ஸி ஆனந்த்!
"மோசடியில் ஈடுபட்ட ஒருத்தரோட புஸ்ஸி ஆனந்த் புகைப்படம் எடுத்தது சர்ச்சை யாயிருக்குதே?''”
"சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில், அமெரிக்கவாழ் இந்தியர்களைக் குறிவைத்து பொன்ஸி மோசடியில் ஈடுபட்டது 'நண்பன் வென்ச்சர்ஸ்' நிறுவனம். அன்றைய மோசடியின் இந்திய மதிப்பு ரூ. 1,079 கோடி. இந்த 'நண்பன் வென்ச்சர்ஸ்' நிறுவனத்தை மூடுவதாக அப்போது அமெரிக்க செக்யூரிட்டிஸ் & எக்ஸ்சேஞ்ச் கமிஷன் (நஊஈ) அமெரிக்க நீதிமன்றத்தில் தெரிவித்தது. நண்பன் வென்ச்சர்ஸில் முதலீடு செய்ய ஆட்களிடம் கேன்வாஸ் செய்த ஆர்.நாராயணன், இன்று நாராயணன் ராமசாமியாக த.வெ.க. அரசின் அமைச்சரும், கழக பொதுச் செயலாளருமான புஸ்ஸி ஆனந்தை சந்தித் திருக்கிறார். அதுதான் தற்பொழுது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அமெரிக்கவாழ் மக்களிடம் மோசடியில் ஈடுபட்டவர் தமிழக அமைச்சருடன் இணைந்து புகைப்படம் எடுத்திருப்பது மீண்டும் நம்பிக்கை மோசடிக்கு வழிவகுக்காதா? என்கின்றனர் விவரமறிந்தவர்கள். அவருடைய பழைய ரிக்கார்டு தெரியாது. ஆனால் அவர்தான் த.வெ.க. அமெரிக்கா கோர் டீமை வழிநடத்தி வரும் தலைவர் நாராயணன் ராமசாமி என்கிறது த.வெ.க. புஸ்ஸி ஆனந்துடன் எடுத்த புகைப்படம் விவகாரமாக உருவெடுத்துள்ளது.''”
ப்ளூகார்னர் நோட்டீஸ்!
"லண்டனில் இருக்கும் ரத்தீஷை முடக்க ப்ளூகார்னர் நோட்டீஸ் பிரயோ கிக்கும் திட்டத்தில் இருக்கிறதாமே அமலாக் கத்துறை?''”
“"டாஸ்மாக் சம் பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களிலும் தான் தான் அதிகார மட்டம் என்பதுபோல் நேரடியாக தலையிட்டார் ரத்தீஷ் என விசாகன் ஐ.ஏ.எஸ். வாக்குமூலம் கொடுத்துள்ள தாக தகவல் வெளியான நிலையில் ரத்தீஷ் மாயமானார். இதனால் ரத்தீஷ் மீது லுக்அவுட் நோட்டீஸை பிரயோகித்தது லஞ்ச ஒழிப்பு மற்றும் அமலாக்கத்துறை. இது இப்படியிருக்க நடைபெறும் அரசியல் விளையாட்டில் எதிரணியினரை அடக்கிவைக்க ரத்தீஷை கொண்டுவந்தால் மட்டுமே சாத்தியம் என மந்திராலோசனை ஆளும் தலைமைக்குத் தரப்பட்டுள்ளது. இந்த நிலையில் லண்டனில்தான் ரத்தீஷ் இருக்கிறார். அவரை எப்படியாவது கொண்டுவர வேண்டுமென்பதற்காக இன்டர்போல் போலீஸாரின் உதவியை நாடி "ப்ளூகார்னர்' நோட்டீஸை விநியோக்க தயாராக இருக்கிறது அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புக்கள். இந்த 'ப்ளூகார்னர்' நோட்டீஸ் என்பது லண்டனிலேயே கைதுசெய்வது அல்ல என்றாலும் குறிப்பிட்ட நபரின் இருப்பிடத்தைக் கண்டறிய, அடையாளத்தைச் சரிபார்க்க அல்லது குற்றப்பதிவை ஆய்வுசெய்ய காவல்துறை இதை ஒரு விசாரணைக் கருவியாகப் பயன்படுத்துகிறது.''”
விருந்தும் கேள்வியும்!
"சமீபத்தில் சென்னை கமிஷனர் அலுவலகத்திலேயே ராஜஸ்தான் மெனுவுடன் போலீஸ் உயரதிகாரிகளுக்கு மிகப்பெரிய விருந்து கொடுத்திருக்காங்களாமே சென்னை மார்வாடி சமூகத்தினர்?''”
"உங்க காதுக்கும் வந்துடுச்சா தலைவரே, இதில் கலந்துகொண்ட அதிகாரிகள் அனைவரும் துணை ஆணையர் அந்தஸ்திற்கும் மேலான அதிகாரிகள். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஜி.எஸ்.டி. அதிகாரிகளுக்கும் மார்வாடிகளுக்கும் பெரிய அளவில் முட்டல் ஏற்பட்டது. இதில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் சிறைவைக்கப்பட்டனர். தகவலறிந்த காவல்துறையினர் ஜி.எஸ்.டி. அதிகாரிகளை மீட்டு பிரச்சனையை சமாதானம் செய்வித்தனர். அத்தோடு ஜி.எஸ்.டி. சோதனை செய்யாமலேயே அரைகுறையாய் அங்கிருந்து புறப்பட்டது ஜி.எஸ்.டி. அதிகாரிகள் குழு. ஜி.எஸ்.டி. அதிகாரிகள் விவகாரத்தில் தங்களுக்கு உதவிய காவல்துறைக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக இந்த மதிய விருந்தை கொடுத்துள்ளதாம் மார்வாடிகள் குழு. "சென்னை கமிஷனர் அலுவலகத்திலேயே விருந்து கொடுக்கவேண்டிய அவசியம் என்ன? ஜி.எஸ்.டி. அதிகாரிகள் இனிமேல் தங்களை நெருங்காமல் இருப்பதற்கா இந்த விருந்து?’ என்ற கேள்விகள் எழுந்துள்ளன.''
மிடாஸில் கொள்முதல்!
"இரண்டு வருடங்களுக்குப் பின் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மிடாஸ் மதுபான ஆலைகளிடமிருந்து கொள்முதலை துவக்கியுள்ள தாமே டாஸ்மாக் நிறுவனம்?''
"மிடாஸின் உரிமையாளர் சசிகலா. தற்பொழுது டாஸ்மாக் நிறுவனத்திற்கு எம்.டி.யாக இருப்பவர் நந்தகுமார் ஐ.ஏ.எஸ். பணிக்கு வந்த நாள் முதல் தனது துறையில் சீர்திருத்தம் செய்கிறேன் என்ற பெயரில் யாருடைய ஆலோசனையும் கேட்காமல் முடிவெடுத்து சுற்றறிக்கை அனுப்புவார். அப்படித்தான் இதுவும் நடந்துள்ளது. டாஸ்மாக் எம்.டி.யாக நந்தகுமார் வந்த நாளிலிருந்தே தி.மு.க. ஆதரவு சரக்கு நிறுவனங்கள் எனக்கூறப்படும் கல்ஸ், எஸ்.என்.ஜெ, பாலாஜி, எம்.பீ., எம்.ஜி.எம். உள்ளிட்ட நிறுவனங்களில் கொள்முதல் செய்யப்படும் சரக்கு களின் எண்ணிக்கையை பாதிக்குப் பாதியாக குறைத்துள்ளார். அதேவேளையில் அ.தி.மு.க. ஆதரவு நிறுவனங்களிடம் கொள்முதலை அதிகப்படுத்தியுள் ளார். குறிப்பாக மிடாஸில் ஜூன் மாதம் 25,000 பெட்டிகள், ஜூலையில் 2 லட்சம் பெட்டிகள், ஆகஸ்டில் 4 லட்சம் பெட்டிகளை கொள்முதல் செய்திருக்கிறது டாஸ்மாக்.''”’
உடல்நலக்குறைவு!
"குன்னம் சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கருக்கு என்ன பிரச்சனை, சட்டமன்றத் கூட்டத்தொடரில் தலை தட்டுப்படவில்லையே?''”
"தேர்தலுக்கு பிறகு, தி.மு.க.வில் எடுக்கவேண்டிய மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு குழு அமைத்தார். முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலான இந்தக் குழுவில் சிவசங்கரும் உள்ளார். கடந்த மாதம் முழுதும் இந்தக் குழு கூட்டங்களில் கலந்துகொண்டார். சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க வழக்கம்போல் கிளம்பிய நிலையில் உடல் சோர்வு காரணமாக, மருத்துவ பரிசோதனைக்குச் சென்றுள்ளார் சிவசங்கர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் இதயத்தில் பிரச்சனை இருப்பதைக் கண்டறிந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அறுவைசிகிச்சை மேற்கொண்டுள்ளார் சிவசங்கர். மருத்துவமனையில் சிவசங்கர் அனுமதிக்கப்பட்டவுடன் தி.மு.க. தலைவர் ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவர் உதய நிதி ஸ்டாலினும் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்துள்ளனர். அறுவை சிகிச்சை காரணமாக மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஓய்விலுள்ளார். சிவசங்கரைப் பிடிக்காத சில தி.மு.க.வினர் ஆளுங்கட்சி நடவடிக்கைக்குப் பயந்து சிவசங்கர் சைலண்டாகியிருப்பதாக வதந்தி பரப்பியிருக்கிறார்களாம்.''”
லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்!
"தி.மு.க.காரரே தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் தந்திருக்கிறாராமே?''”
"அது ஒரு சுவாரசியமான விஷயம் தலைவரே, வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதியைச் சேர்ந்த வடக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினரும், பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரருமான சிவக்குமார், தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்தர, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சிவக்குமார், ‘"நான் துரைமுருகனின் பங்காளி மகன், அவர் எனக்கு சித்தப்பா உறவு. 2021-ல் தி.மு.க. ஆட்சியமைந்ததும் ஒப்பந் தங்கள் தருவதாக 1 கோடி ரூபாய் பணம் வாங்கினார். அதற்கடுத்து உள்ளாட்சித் தேர்தலின்போது கே.வி. குப்பம் ஒன்றியக்குழு தலைவர் பதவி எனக்கு தருவதாக வாக்குறுதி தந்தார். அதற்காக 1.25 கோடி ரூபாய் வாங்கி னார்கள். சொன்னது போல் ஒப்பந்த வேலை கள் எதுவும் தர வில்லை, சேர்மன் பதவியும் தரவில்லை. ஒப்பந்தங்கள் தாங்க, இல்லை பணத்தை திருப்பித் தாங்க எனக் கேட்டபோது இரண்டு வேலைகள் தந்தார்கள். அதற்கும் 23% கமிஷன் வாங்கினார்கள். 2.5 கோடி பணத்தைத் தரவில்லை. பலமுறை கேட்டும் சரியான பதிலில்லை. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் இதுபற்றி தலைவர், சின்னவரை ஜூலை மாதம் 7-ஆம் தேதி சந்தித்து இதுபற்றி கடிதம் தந்தேன். விசாரிக் கிறோம் எனச் சொன்னார்கள். இரண்டு மாதமா எந்த நடவடிக்கையும் எடுக்காத தாலே இதுபற்றி லஞ்ச ஒழிப்புத்துறை யிடம் புகார்தந்துள்ளேன், சி.எம் அலுவல கத்துக்கும் அனுப்பியுள்ளோம். உத்தரவு வந்ததும் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லியுள்ளார்கள். இப்போது புகாரை வாபஸ் வாங்கு, பணம் தருகிறோம் எனச்சொன்னார்கள். பணம் தாங்க, புகாரை வாபஸ் வாங்குகிறேன் எனச்சொல்லியுள்ளேன்'’என்றார். தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தரப்போ, "2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது தேர்தல் நிதி தந்தார். அதனை இப்போது கடனாகத் தந்ததாக கூறுகிறார். அதேபோல் ஆட்சிக்கு வந்தபின் அவர் தந்த பணத்துக்கு ஒப்பந்தங்கள் தரப்பட்டது. சேர்மன் பதவியெல்லாம் மா.செ. பரிந்துரை, கட்சித் தலைவர் பார்த்து தருவது. கட்சித் தலைவரிடம் தந்துள்ள புகார், லஞ்ச ஒழிப்புத்துறையில் தந்துள்ள புகார் இரண்டையும் பாருங்கள். மொத்த தொகை 2.25 கோடியாக சொல்லியிருப்பார். ஆனால் எது, எதற்குத் தந்தேன் என்பதில் குளறுபடி இருக்கும். யாரோ தூண்டுதலின்பேரில் அவர் பொய் யாக புகார் தந்துள்ளார்'’ என்கிறார்கள்.''
முட்டிக்கொண்ட ஆலோசகர்கள்!
"தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் முக்கிய ஆலோசகர்களான ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணுரெட்டி தரப்பு சமீபத்தில் முட்டிக்கிட்டதாமே?''”
"சமீபத்தில் நடைபெற்ற கட்சியின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், சட்டமன்றத்திற்கான அடுத்தகட்ட உத்திகள், மக்கள் சார்ந்த திட்டங்களைப் பற்றி விவாதிக்கா மல், ஆளுமைகளான தி.மு.க.வை மட்டுமே தொடர்ந்து குறை கூறிவருவது சரியாக இருக்காது என்றும், மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் ஜான் ஆரோக்கியசாமி தரப்பில் காரசாரமான விமர்சனங்கள் முன்வைக்கப் பட்டுள்ளன. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் களமிறங்கிய விஷ்ணுரெட்டி தரப்பு, ‘ஆளுங்கட்சியின் தவறுகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி வீழ்த்துவது மட்டுமே கட்சியின் தீவிர வளர்ச்சிக்கு வழிவகுக்கும், இதையும் கட்சி யின் வளர்ச்சிப் பாதையாகவே பார்க்கவேண்டும்’ என எதிர்க்குரல் கொடுத்துள்ளது. இரு முக்கிய ஆலோசகர்களின் ஆதரவாளர்களும் நேருக்கு நேர் வார்த்தைப் போரில் ஈடுபட்டுவருவதால், த.வெ.க. வின் தலைமை அலுவலகமே களேபரமாக மாறி யுள்ளது. கட்சி உருவான சில காலத்திலேயே மேல் மட்ட ஆலோசகர்களிடையே நிலவும் இந்த உள் கட்சிப் பூசலும் அதிகாரம் குறித்த மோதலும் விஜய்க்கு பெரும் தலைவலியையும், தொண்டர்களி டையே கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.''
சின்ன மீன்! பெரிய மீன் வியூகம்!
"சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கும் யுக்தியாக, தன் நண்பருக்கு டெண்டரில் ஆலோசனை கொடுத்தாராமே விஷ்ணுரெட்டி?''
"ஆமாம் தலைவரே, புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கிவரும் முதலமைச்சரின் அலுவலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையிலுள்ள 10 வது தளத்திற்கு மாற்றப்படுகிறது. இதற்கான டெண்டரை ஈஸ்வரி நிறுவனம், ராசி பில்டர்ஸ் , சி.யூ.பி.இ. இன்ஃப்ரா, ஸ்ரீராகவேந்தரா பில்டர்ஸ் ஆகிய நான்கு நிறுவனங்களும் அளித்திருந்தன. தமிழக அரசு நிர்ணயம் செய்த தொகையைவிட 32% குறைவாக செய்துதர ராசி பில்டர்ஸ் நிறு வனம் முன்வந்தது. இந்த ராசி பில்டர்ஸ் உரிமையாளரும் விஷ்ணு ரெட்டியும் நண்பர்களாம். இந்தத் தொகைக்கு செய்தால் நிச்சயம் நட்டம்தான் ஆனாலும், குறைந்த தொகைக்கு டெண்டர் போடவைத்துள்ளார் விஷ்ணுரெட்டி. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தொடரில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர், தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை, 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் சுமார் 1200 கோடி ரூபாய் செலவில் கட்டவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த மிகப்பெரிய ப்ராஜெக்ட்டை பெற்றுக்கொடுக்கும் திட்டத்துடன், இந்த ஏற்பாடாம்."
பவள விழாக் கொண்டாட்டம்!
"சரி, நானும் ஒரு விஷயம் சொல்றேன் கேட்டுக்க... தினமலர் நாளிதழ் தொடங்கி பவள விழா ஆண்டான 75 ஆண்டுகளை நிறைவு செய்ததை விழா வாகக் கொண்டாடியது நாளிதழ் நிர்வாகம். சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வள்ளுவர் கோட்டத்தில் இதற்கான சிறப்புத் தபால் தலை வெளியிடும் விழா செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்கள் பலரும் கலந்துகொண்டனர். இதழின் 75 ஆண்டுகால பயணத்தை விளக்கும் ஆவணப்படம் திரையிடப்பட்டது. பின் பவள விழா சிறப்புத் தபால் தலையை துணை ஜனாதிபதி ராதாகிருஷ் ணன் வெளியிட, அவருக்கு சால்வை அணிவித்துக் கௌரவித்தார் தினமலர் கோவை பதிப்பின் வெளியீட்டாளர் ஆதிமூலம்.''’
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)





