Politics
சர்க்கஸ் கூடாரமாகி விட்டது சட்டசபை: தி.மு.க., - எம்.பி., கனிமொழி காட்டம்

சென்னை: 'மக்கள் பிரச்னைகள் குறித்து பேச வேண்டிய சட்டசபை, இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக்கிறது' என, தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி எம்.பி., விமர்சித்து உள்ளார்.
தமிழ் சமூகத்துக்கு நாங்கள் என்ன செய்தோம் என்ற வரலாறு, த.வெ.க.,விற்கும், முதல்வர் விஜய்க்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கருணாநிதி குறித்தும், தி.மு.க., குறித்தும் அவதுாறாகப் பேசுவதையே, அரசியல் தகுதியாக இன்னும் எத்தனை காலத்துக்கு நினைத்துக் கொள்ள போகின்றனர்?
எல்லாவற்றையும் நம்புவதற்கு, ஒரு கூட்டம் இருக்கும் வரை, எதை வேண்டுமானாலும் பேசுவதற்கும் ஒரு கூட்டம் இருக்கும்.
காவல் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்திற்கு, பதிலுரை அளிக்க வேண்டிய முதல்வரால், எழுதிக் கொடுத்ததை படிப்பதைத் தவிர, கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியவில்லை.
நீண்ட சொற்பொழிவை நிகழ்த்தி விட்டு, எதிர்வினை வந்து விடுமோ என்ற பயத்தில், விவாதத்தையே சபாநாயகர் தவிர்த்திருக்கிறார்.
மூன்று நாட்களாக பதிலுரைக்கு ஒத்திகை பார்த்தும், மானிய கோரிக்கை தொடர்பாக முதல்வர் பேசியது சொற்பமே.
மற்றவை எல்லாம் காலங்காலமாகப் பரப்பப்பட்ட வதந்திகளையும், சமீபத்திய 'வாட்ஸாப்' தொழிற்சாலையின் பொய்களையும் கலந்து, முதல்வருக்கு ஒரு பிரதியை கொடுத்துள்ளனர்.
சட்டம் -- ஒழுங்கு குறித்தும், குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு குறித்தும், பிற மக்கள் பிரச்னைகள் குறித்தும் பேச வேண்டிய சபை, இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக்கிறது. சத்தமாக சொல்லப்படும் அனைத்தும் உண்மையல்ல.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.