“எம்புள்ளையவா கிண்டல் பண்ற...” ஓசிக்குடி ஆசாமியின் கழுத்தை இறுக்கிய மாணவியின் தந்தை..! காணா பொண மாக்கிய பயங்கரம்

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சங்கிலி முருகன் (வயது 38). திருமணம் செய்து கொள்ளாமல் மன்மதன் போல சுற்றி வந்த இவர் கடந்த 10ஆம் தேதி முதல் மாயமானார். இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் செம்பட்டி காவல் நிலையத்தில் மாயமானதாக வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் மாயமான அன்று இரவு சங்கிலி முருகன் அதே ஊரை சேர்ந்த பாக்கிய செல்வன் என்பவருடன் மது அருந்த சென்றதாக சிலர் தெரிவித்தனர். பாக்கிய செல்வன் 3 நாட்களாக சிக்காத நிலையில் 14 ந்தேதி மதுக்கரை ஒன்றில் நண்பர்களுடன் மது அருந்தும் போது போலீஸ் பிடியில் சிக்கினான்.
அவரை பிடித்து விசாரித்த போது தனக்கு “சங்கிலி முருகனை பற்றி தெரியாது, அவனை பார்க்கவில்லை” என்று சொன்னதையே கூறிக் கொண்டிருந்த நிலையில் சம்பவத்தன்று இவர்களுடன் மது அருந்தியதாக சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரிக்கப்பட்ட 3 பேர் போலீசாரின் சிறப்பு கவனிப்பால், சங்கிலி முருகனை காணாபொணமாக்கிவிட்டதாக தெரிவித்தனர். பாக்கிய செல்வனின் மகளை கிண்டல் செய்தவனை ஒரு வருடம் காத்திருந்து கழுத்தை இறுக்கிய கொடூர கொலை வெளிச்சத்துக்கு வந்தது.
சங்கிலி முருகனுக்கு 38 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் கிடைத்த வேலைகளை செய்து கொண்டு ஊருக்குள் பெண்களை கிண்டல் செய்வது, காதல் செய்வது என்று மன்மதன் போல சுற்றிவந்ததாக கூறப்படுகின்றது.
கடந்த ஆண்டு பள்ளிக்கூடத்துக்கு சென்று வந்த பாக்கிய செல்வத்தின் 16 வயது மகளை சங்கிலி முருகன் கிண்டல் செய்ததாக கூறப்படுகின்றது. இது குறித்து கேட்டு பாக்கிய செல்வம், சங்கிலி முருகனுடன் சண்டையிட்டதாகவும் உறவினர்கள் சமாதனப்படுத்தியதாகவும் கூறப்படுகின்றது.
இதனை மறக்காமல் மனதில் வைத்திருந்த பாக்கிய செல்வம் சம்பவத்தன்று செம்பட்டியில் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது அந்த வழியாக சென்ற சங்கிலி முருகனை மது குடிக்க அழைத்துள்ளார்.
ஓசிக்குடிக்கு ஆசைப்பட்ட சங்கிலி முருகனை மூக்கு முட்ட மது அருந்த வைத்துள்ளனர். அப்போது “எம்புள்ளையவா கிண்டல் பன்ற” என்று ஆவேசமான பாக்கியசெல்வம் , கூட்டாளிகளுடன் சேர்ந்து சங்கிலிமுருகனை கழுத்தை நெரித்து கொலை செய்து, சடலத்தை காரில் தூக்கிபோட்டு தனது சொந்த ஊரான மதுரை மாவட்டம் கப்பலூர் அடுத்த உச்சிப்பட்டிக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகின்றது.
துணைக்கோள் நகரத்துக்காக கட்டப்பட்டு கைவிடப்பட்டு முள்செடிகள் நிறைந்து கிடக்கும் அரசு ஊழியர் குடியிருப்பின் தரைமட்ட நீர் தேக்க தொட்டிக்குள் சங்கிலி முருகனின் சடலத்தை வீசிவிட்டு தப்பியது தெரியவந்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு திண்டுக்கல் எஸ்.பி ஜெயகுமார் மற்றும் போலீசார் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அழுகிய நிலையில் கிடந்த சங்கிலி முருகனின் சடலத்தை மீட்டு பிணக்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து பாக்கிய செல்வம் மற்றும் கூட்டாளிகளை கொலை வழக்கில் கைது செய்த செம்பட்டி போலீசார். சடலத்தை கடத்திச்செல்ல பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். பாக்கிய செல்வத்தை தவிர்த்து இந்த கொலை வழக்கில் சிக்கிய 3 பேரும் ஓசிகுடிக்காக அவருடன் சென்றவர்கள் என்பதை தெரிவித்த போலீசார்.
கடந்த ஒரு வருடமாக திட்டமிட்டு இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்ததாக கூறினர்.