செம்பட்டி கட்டட தொழிலாளி காரில் கடத்தி கொலை; 16 நாட்களுக்கு பின் உடல் மீட்பு

செம்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி கட்டட தொழிலாளி சங்கிலிமுருகனை 38, காரில் கடத்திச்சென்று கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தந்த தகவலையடுத்து 16 நாட்களுக்கு பின் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பாழடைந்த தண்ணீர் தொட்டியில் கிடந்த சங்கிலிமுருகன் உடலை மீட்டனர்.
செம்பட்டி அருகே சீவல்சரகு கட்டட தொழிலாளி சங்கிலிமுருகன் 38, திருமணம் ஆகி விவாகரத்தானவர். இவர் ஆக., 29 நண்பர்கள் சிலருடன் வக்கம்பட்டி ரோட்டில் மது அருந்தினார். அதன்பிறகு அவர் மாயமானார். அவரது தம்பி முத்துப்பாண்டி அளித்த புகாரில் செம்பட்டி போலீசார் விசாரித்து வந்தனர்.
நேற்று முன்தினம் சங்கிலிமுருகனை கடத்தியதாக சிலரை சுற்றி வளைத்து முத்துப்பாண்டி செம்பட்டி போலீசாரிடம் தெரிவித்தார். அங்கு வந்த போலீசார் முத்துப்பாண்டி சுற்றி வளைத்த அதே ஊரைச் சேர்ந்த பாக்கியசெல்வம் 48, உட்பட 4 பேரை விசாரித்தனர். சங்கிலிமுருகனை காரில் கடத்தி கழுத்து, இடுப்பு பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்து மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உச்சப்பட்டியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்திலுள்ள தண்ணீர் தொட்டியில் வீசியதை ஒப்புக்கொண்டனர்.
அவர்கள் தந்த தகவலின்படி 16 நாட்களுக்கு பிறகு எஸ்.பி., ஜெயக்குமார், டி.எஸ்.பி., இமயவரம்பன், இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சிவசக்தி மற்றும் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
போலீசார் கூறியதாவது: அரசு வேலை வாங்கித் தருவதாக பாக்கியசெல்வம், அதே ஊரைச் சேர்ந்த முருகன் 45, மருதுபாண்டி 44, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ரங்கசாமி 37, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சந்தானம் 30, ஆகியோர் சேர்ந்து சங்கிலிமுருகனை ஏமாற்றி பணம் பறித்தனர். சங்கிலிமுருகன் பணத்தை திருப்பி கேட்ட போது வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் சங்கிலிமுருகனை பாக்கியசெல்வம் உள்ளிட்டோர் கொலை செய்ததாக கூறியுள்ளனர்.
மேலும் பாக்கியசெல்வத்தின் உறவு பெண்ணுக்கு சங்கிலிமுருகன் பாலியல் தொல்லை அளித்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. கொலைக்கான முழு காரணம் குறித்து விசாரித்து வருகிறோம் என்றனர்.
பாக்கியசெல்வம், முருகன், மருதுபாண்டி, ரங்கசாமி ஆகியோரை கைது செய்த போலீசார் தலைமறைவான சந்தானத்தை போலீசார் தேடி வருகின்றனர்.