Politics
சட்டமன்றத்தில் தி.மு.க மீது உக்கிர தாக்குதல் - `மாற்று' என்று சொல்லிவந்த விஜய் மாறிப்போனாரா?
"தி.மு.க. மீதான ஊழல் குற்றச்சாட்டு, ஏதோ இப்போது உருவான பிரச்னை அல்ல. அது, கருணாநிதி காலத்திலிருந்தே தொடர்கிறது" என்ற அரசியல் பிம்பத்தை உருவாக்குவதுதான் விஜய்யின் நோக்கமாக இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் என்றாலே அனல் பறக்கும். ஆட்சி மாறினாலும், முதலமைச்சர்கள் மாறினாலும், இந்த விவாதம் மட்டும் எப்போதும் பரபரப்பு மிக்க களமாகவே இருக்கும். காரணம், காவல்துறை என்பது அரசின் நிர்வாகத்தை மக்களிடம் நேரடியாகக் கொண்டு செல்லும் துறை.
குற்றம் நடந்தால் முதலில் மக்கள் தேடிச் செல்வது காவல் நிலையத்தைத்தான். புகார் பதிவு செய்யப்படுகிறதா, எவ்வளவு வேகமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது, குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்களா, விசாரணை எப்படி நடக்கிறது, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் குற்றங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றனவா... இவை அனைத்துமே ஓர் அரசின் சட்டம்-ஒழுங்கு நிர்வாகத்தை நேரடியாக அளவிடும் அளவுகோல்கள்.
அதனால்தான், காவல்துறை மானியக் கோரிக்கை என்பது மற்ற துறைகளுக்கான மானியங்களைப் போல வெறுமனே வரவு-செலவுக் கணக்குகளைப் படிக்கும் நிகழ்வாக இருப்பதில்லை. ஆளுங்கட்சி தனது சாதனைகளைப் பட்டியலிடும்; எதிர்க்கட்சி குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக முன்வைக்கும். பல நேரங்களில் அந்த விவாதம் அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத்துக்கே ஒரு ‘ரிப்போர்ட் கார்டு’ போல மாறிவிடும். இந்த வரலாறு எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா காலத்திலிருந்தே தொடர்கிறது.
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் திருச்செந்தூர் கோயில் நகை மதிப்பீட்டாளர் சுப்பிரமணிய பிள்ளை மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் மிகப்பெரிய அரசியல் பிரச்னையாக உருவெடுத்தது. அந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை வெளியான விதம், அதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என அப்போது சட்டமன்றத்திலும் அரசியல் களத்திலும் இந்த விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட்டது.
அந்த விவகாரத்தை எதிர்த்து கருணாநிதி மதுரையிலிருந்து திருச்செந்தூர் வரை பாதயாத்திரை மேற்கொண்டதும் அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்கச் சம்பவமாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் உதயகுமார் உயிரிழந்த விவகாரமும் அப்போது பெரிய அரசியல் பிரச்னையாக மாறியது. காவல்துறையின் செயல்பாடு குறித்து அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் காவல்துறையைச் சுற்றிய சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. மகாமகம் சம்பவம், தர்மபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தில் மூன்று மாணவிகள் உயிரிழந்தது, பல்வேறு போராட்டங்களில் காவல்துறையின் நடவடிக்கை உள்ளிட்டவை சட்டமன்ற விவாதங்களில் முக்கிய இடம் பெற்றன. தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் இதே கதைதான். காவல்துறை தடியடி, போராட்டக்காரர்கள் மீதான நடவடிக்கை, காவல் மரணங்கள், குற்ற வழக்குகளில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதில் தாமதம் போன்றவை அப்போது அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முக்கிய ஆயுதங்களாக இருந்தன.
அதாவது, ஆளுங்கட்சியாக இருக்கும்போது காவல்துறையைப் பாதுகாப்பது... எதிர்க்கட்சியாக இருக்கும்போது அதே காவல்துறையை வைத்து ஆட்சியைக் கேள்வி கேட்பது என்ற அரசியல் கணக்கு பல தசாப்தங்களாகத் தொடர்கிறது. இந்தச் சூழலில்தான், காவல்துறை மானியக் கோரிக்கைக்கு முதலமைச்சரும் த.வெ.க தலைவருமான விஜய் என்ன பதில் சொல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
அதற்குக் காரணம், ஆட்சிக்கு வருவதற்கு முன்பே சட்டம்-ஒழுங்கு பிரச்னையை தனது அரசியலின் முக்கியமான அச்சாக விஜய் பயன்படுத்தியிருந்தார். பெண்கள் பாதுகாப்பாகச் சாலையில் நடமாட முடியவில்லை, பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துவிட்டன, காவல் மரணங்கள் தொடர்கின்றன, போதைப்பொருள் கலாசாரம் அதிகரித்துவிட்டது என அப்போது தி.மு.க. அரசுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அவர் முன்வைத்திருந்தார்.
குறிப்பாக, காவல் மரணங்களை அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். அந்தக் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்த சம்பவங்களும் அவருடைய அரசியல் அணுகுமுறையில் மனிதாபிமான முகத்தை வெளிப்படுத்தியிருந்தன. அதனால், ‘இப்போது ஆட்சியில் இருக்கும் விஜய், தனது சொந்த அரசு எதிர்கொள்ளும் சட்டம்-ஒழுங்கு கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வார்?’ என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்குமேல், காவல்துறை மானியக் கோரிக்கைக்கு மூன்று நாட்களுக்கு முன்பே, ‘நான் பேசும்போது யாரும் வெளியேறக் கூடாது’ என்ற வகையில் அவர் கொடுத்த பில்ட்அப், எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியது.
கடந்த 100 நாட்களில் நடந்த குற்றங்களுக்கு அரசு என்ன செய்தது? காவல் மரணங்கள் தொடர்பாக ஒவ்வொரு வழக்கிலும் என்ன நடவடிக்கை? த.வெ.க நிர்வாகிகள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் என்ன நடவடிக்கை? போதைப்பொருள் விவகாரத்தில் அரசு எங்கே நிற்கிறது? போன்ற கேள்விகளுக்குத்தான் எதிர்க்கட்சிகள் விரிவான பதிலை எதிர்பார்த்தன. அந்த இடத்தில்தான் விவாதம் வேறு பாதைக்குத் திரும்பியது.
கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சிக்கு எதிராக எம்.ஜி.ஆர் மத்திய அரசிடம் அளித்த புகார்களின் அடிப்படையில் அமைக்கப்பட்ட சர்காரியா கமிஷன், பல்வேறு குற்றச்சாட்டுகளை விசாரித்தது. மொத்தம் 28 குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், அவற்றில் ஏழு குற்றச்சாட்டுகளுக்கு முதற்கட்ட ஆதாரங்கள் இருப்பதாகக் கூறப்பட்டதாக அப்போது குறிப்பிடப்பட்டது.
ஆனால், அந்த அறிக்கையின் அடிப்படையில் குற்றவியல் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படவில்லை. நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் கருணாநிதி தண்டிக்கப்பட்டார் என்றும் சொல்ல முடியாது. ஒரு விசாரணைக் கமிஷன் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பதாகக் கூறுவதும், நீதிமன்றம் குற்றத்தை நிரூபித்து தண்டனை வழங்குவதும் ஒன்றல்ல... அவை இரண்டும் வேறு வேறு. ஆனால், விஜய் தனது உரையில் அதை அரசியல் ஆயுதமாக்கியிருக்கிறார்.
சர்க்காரியா கமிஷன் காலகட்டத்தில் கருணாநிதி தலைமையிலான திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்றன. பின்னர், 1980-ல் திமுகவும் இந்திரா காங்கிரஸும் கூட்டணி அமைத்த பிறகு, அந்த வழக்குகள் நீர்த்துப்போனதாக ஓர் அரசியல் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
“அந்த வழக்குகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்பதால்தான் அவை வாபஸ் பெறப்பட்டன” என்ற விளக்கம் கருணாநிதி தரப்பில் சொல்லப்பட்டது. குறிப்பாக, சிபிஐ பதிவு செய்த அந்த இரண்டு வழக்குகளும் பின்னர் வாபஸ் பெறப்பட்டதாக அவர் கூறியிருக்கிறார். எனவே, ஒரு பக்கம் கருணாநிதியின் விளக்கம் இருக்கிறது; இன்னொரு பக்கம், இந்திரா காங்கிரஸுடன் திமுக கூட்டணி அமைத்ததால்தான் அந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன என்ற அரசியல் விமர்சனமும் இருக்கிறது.
சர்க்காரியா கமிஷன் குறித்துப் பேசுவதன் நோக்கம், கடந்த கால ஊழல் குற்றச்சாட்டுகளை நினைவுபடுத்துவது மட்டும் அல்ல. ‘தி.மு.க. மீது ஊழல் குற்றச்சாட்டு என்பது இன்றைய பிரச்னை அல்ல; கருணாநிதி காலத்திலிருந்தே அது தொடர்கிறது’ என்ற அரசியல் பிம்பத்தை உருவாக்குவதுதான். இதில்தான் விஜய்யின் அரசியல் கணக்கு தெளிவாகத் தெரிகிறது.
தி.மு.க ஆட்சியின் கடந்த கால ஊழல் குற்றச்சாட்டுகளை முதல்வர் விஜய் விரிவாகப் பேசினார். அமலாக்கத்துறை விசாரணைகள், கடிதங்கள், கட்சிப் பணம் தொடர்பான குற்றச்சாட்டுகள், கே.என்.நேரு, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் தொடர்பான வழக்குகள் என தற்போதைய அரசியல் குற்றச்சாட்டுகளையும் அவர் இணைக்கிறார். ஆனால் அதே அளவுக்கு அ.தி.மு.க. ஆட்சிக் கால ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அவர் பேசவில்லை.
முன்னாள் அமைச்சர்கள் மீதுள்ள வழக்குகள், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான வழக்கு உள்ளிட்டவை இருக்கும்போதும், அவற்றை மையப்படுத்தித் தாக்குதல் நடத்தவில்லை. இதற்குக் காரணம் என்ன? அரசியல் கணக்கு என்று பார்த்தால், பதில் சுலபமானது.
விஜய்யின் உடனடி அரசியல் எதிரி யார் என்பதில் அவருக்கு எந்தக் குழப்பமும் இல்லை. அது தி.மு.க. ‘தமிழ்நாட்டில் தி.மு.க. – த.வெ.க என்ற இரு துருவங்கள்தான். மற்றவர்கள் அரசியல் களத்தில் முக்கியமில்லை’ என்ற பிம்பத்தை உருவாக்கும் முயற்சி அவரது அரசியல் செயல்பாடுகளில் தெளிவாகத் தெரிகிறது. அ.தி.மு.க.விலிருந்து எதிர்காலத்தில் சில எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் கொண்டுவர வேண்டும் என்ற அரசியல் கணக்கு இந்த அணுகுமுறைக்கு இன்னொரு காரணமாக இருக்கலாம்.
விஜய் உரைக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய 15 கேள்விகளில் காவல் மரணங்கள் முக்கியமானதாக இருந்தன. ஒவ்வொரு காவல் மரணத்திலும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? யார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது? விசாரணை எந்த நிலையில் இருக்கிறது? இந்த கேள்விகளுக்கு வழக்கு வாரியாக பதில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், தவெக நிர்வாகிகள் மீது முன்வைக்கப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும் விரிவாகப் பதில் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விஜய்யின் பதில் பெரும்பாலும் ஒட்டுமொத்த அரசியல் குற்றச்சாட்டுகளாகவே அமைந்தது.
அதற்குப் பதிலாக, தி.மு.க ஆட்சியில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படும் வழக்குகள், தி.மு.க. நிர்வாகிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், பாலியல் வன்கொடுமை வழக்குகளில் நடவடிக்கை தாமதமானதாகக் கூறப்படும் சம்பவங்கள் என நீண்ட பட்டியலை அவர் வாசித்தார். அதாவது, ‘நீங்கள் கேட்கும் கேள்விக்கு நான் பதில் சொல்வதைவிட, நீங்கள் ஆட்சியிலிருந்தபோது நடந்ததை நான் கேட்கிறேன்’ என்ற பாணியிலேயே அவரது பதில் அமைந்தது.
இதற்கிடையே, விஜய்யின் உரையின்போது தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அவர் மூன்று நாட்களாகக் கட்டமைத்திருந்த எதிர்பார்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார். தி.மு.க.வை நேரடியாகத் தாக்கினார். ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். சர்காரியா கமிஷனை எடுத்தார். பழைய வழக்குகளை நினைவுபடுத்தினார். தனது அரசியல் எதிரி யார் என்பதையும் வெளிப்படையாகக் காட்டினார். அதே நேரத்தில், கடந்த 100 நாட்களில் அவரது அரசாங்கம் எதிர்கொண்ட சட்டம்-ஒழுங்கு கேள்விகளுக்கு விரிவான, வழக்குவாரியான பதில் கிடைத்ததா என்ற கேள்வி அப்படியே இருக்கிறது.
விஜய் முன்வைத்த இன்னொரு வாதமும் கவனிக்கத்தக்கது. ‘பல குற்றங்கள் 100 நாட்களில் நடந்தவை அல்ல; பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடப்பவை. ஆட்சிக்கு வந்த 100 நாட்களிலேயே அவற்றை எப்படி முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும்?’ என்பதுதான் அவரது வாதத்தின் சாரம். அரசியல் ரீதியாக இது ஒரு சமாளிக்கும் வாதமாகவும் பார்க்கப்படுகிறது.
ஏனெனில், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சட்டம்-ஒழுங்கு குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாற்றம் வரும்’ என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்த நிலையில், ஆட்சிக்கு வந்த பிறகு அதே பிரச்னைகள் தொடர்வதை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.
கொலைகள், கொள்ளைகள், போதைப்பொருள் விவகாரங்கள், பள்ளி நிர்வாகிகள் மீது தாக்குதல் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து பேசப்படும் சூழலில், ‘இது பல ஆண்டுகளாக இருக்கும் பிரச்னை’ என்பது மட்டும் போதுமான பதிலாக இருக்குமா என்பதுதான் அரசியல் கேள்வி.
முதலில், “எதிர்க்கட்சித் தலைவர் பதில் சொல்ல அனுமதி வேண்டும்” என்று அவை முன்னவர் சொல்கிறார்... விஜய்யும் சொல்கிறார். சபாநாயகரும், “நான் அனுமதிக்கிறேன்” என்று வெளிப்படையாகச் சொல்கிறார். அடுத்த ஒரு நிமிடத்திலேயே சபாநாயகரின் உதவியாளர் வந்து ஒரு துண்டுச் சீட்டைக் கொடுக்கிறார். சபாநாயகர் திடீரென்று, “அனுமதிக்க முடியாது” என்று சொல்லிவிடுகிறார். திடீரென்று தனது முடிவை மாற்றியதற்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுகிறது. இதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.
நேற்றைய விவாதத்தில் இன்னொரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. ஆட்சியில் இருப்பவர்கள் எப்போதுமே காவல்துறையின் செயல்பாடுகளைப் பாதுகாப்பார்கள். எதிர்க்கட்சிகள் அதே காவல்துறையின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவார்கள். எம்.ஜி.ஆர். காலத்திலும் அது நடந்தது. கருணாநிதி காலத்திலும் நடந்தது. ஜெயலலிதா காலத்திலும் நடந்தது. இன்றும் நடக்கிறது.
விசாரணைக் கமிஷன்கள் அமைக்கப்படுகின்றன. அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுகின்றன. சில சமயம் அவை கசிகின்றன. சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் பல நேரங்களில், அந்த அறிக்கைகளின் இறுதி சட்ட நடவடிக்கை எங்கே போனது என்பது காலப்போக்கில் மறைந்து விடுகிறது. பால் கமிஷன் முதல் பல்வேறு விசாரணைக் கமிஷன்கள் வரை இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன.
அதனால், இன்றைய சட்டமன்ற விவாதத்தை வெறுமனே ‘விஜய் – தி.மு.க. மோதல்’ என்று மட்டும் பார்க்க முடியாது. இது தமிழ்நாட்டு அரசியலில் நீண்ட காலமாகத் தொடர்ந்து வரும் ஒரு பாரம்பர்யத்தின் புதிய அத்தியாயம். ஆனால் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. முன்பு காவல்துறை மானிய விவாதங்களில் நிர்வாகத் தோல்விகள், காவல்துறை நடவடிக்கைகள், சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஆகியவை மையமாக இருந்தன. இப்போது அதனுடன் தனிநபர் ஊழல் குற்றச்சாட்டுகள், கட்சிகளின் அரசியல் எதிர்காலம், பழைய கமிஷன் அறிக்கைகள், அமலாக்கத்துறை வழக்குகள் எனக் கலந்துவிட்டன.
முதல்வர் விஜய்யின் சட்டமன்ற பேச்சை ஆதரித்தும், விமர்சித்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் த.வெ.க அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடுமையாக விமர்சித்திருக்கிறார். "காவல்துறை மானிய கோரிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதலமைச்சர் பதிலுரை வழங்கினார். ஆனால் சட்டம் ஒழுங்கு, காவல்துறை உள்ளிட்ட உறுப்பினர்கள் எழுப்பிய எந்த கேள்விக்கும் ‘பதிலுரையில்’ எந்த பதிலும் இடம் பெறவில்லை. மக்கள் பிரச்சனை பற்றிப் பேசுவதற்குப் பதிலாக முழுக்க முழுக்க எதிர்க்கட்சியைக் குறிவைத்து அடுக்கிய குற்றச்சாட்டுகளே நிரம்பி இருந்தன.
அவசர நிலை காலத்தில் இந்தியாவில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக மிகப்பெரிய போராட்டங்களும் அதன் காரணமாக அடக்குமுறைகளும் அத்துமீறல்களும் நடந்தது நாடறிந்த வரலாறு. ஆனால் அவசரநிலை காலத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையால் கடுமையாகத் தாக்கப்பட்டு அவரது தாடை உடைக்கப்பட்டது. உருவக் கேலி செய்யும் விதமாகப் பேசுவது யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது. அதை முதலமைச்சரே செய்திருப்பது பொறுப்பற்ற செயலாகும்.
சட்டமன்றத்தை மக்கள் நலனுக்கு எந்த வகையிலும் எள்ளளவுக்குக் கூட உதவாத தனிமனித தாக்குதல்களுக்கான இடமாகவோ அல்லது தங்கள் தலைவரைப் பாராட்டிப் பேசும் இடமாகவோ மாற்றுவது முற்றிலும் அறமற்ற செயலாகும். கடுமையான அரசியல் ரீதியான விமர்சனங்களை, அதுவும் கூட நாகரீகமாகச் சட்டமன்றத்திற்கு வெளியே வைப்பதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்க முடியாது. ஆனால் ஏழை, எளிய மக்கள் உள்ளிட்ட தமிழக மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப்பணத்தில் நடைபெறும் சட்டமன்றத்தின் நேரத்தை மக்கள் நலனுக்காக அன்றி விரயம் செய்வது, அது யாராக இருந்தாலும் அதை ஏற்க முடியாது" என்று கூறியிருக்கிறார்.
இதற்கு முன்பு இருந்த ஆளுங்கட்சியின் முதல்வர்களும் சட்டமன்றத்தை தங்கள் அரசியலுக்காகப் பயன்படுத்தியதை இதற்கு முன் பார்த்திருக்கிறோம். ஆனால் மாற்று என்று சொல்லி வந்திருக்கும் விஜய்யும் அதே பாதையில் பயணிப்பது சரியா என்பதுதான் முக்கியமான கேள்வி.
