Religion
பூப்பல்லக்கில் விநாயகர்... அதிர்ந்த தாரை தப்பட்டை - ராமேஸ்வரத்தில் கோலாகல ஊர்வலம்

ராமேஸ்வரத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அக்னி தீர்த்தம் கடலில் கரைக்கப்பட்டன.
ராமேஸ்வரத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அக்னி தீர்த்தம் கடலில் கரைக்கப்பட்டன. இந்த ஊர்வலத்தில் காளி ஆட்டம் மற்றும் வான வேடிக்கைகள் இடம்பெற்றன.
செப்டம்பர் 14 அன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. செப்டம்பர் 15 அன்று பல இடங்களில் உள்ள சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, ராமேஸ்வரத்தில் 20க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் திட்டக்குடி துர்க்கை அம்மன் கோவில் அருகே ஒன்றிணைந்தன. மார்க்கெட் தெரு, ரயில்வே பீடர் ரோடு, காவல் நிலையம், ராமர் தீர்த்தம், மேலத்தெரு, ராமநாதசுவாமி கோவில் வளாகம் வழியாக அக்னி தீர்த்தம் கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
இந்த ஊர்வலத்தில் காளி ஆட்டம், வான வேடிக்கைகள், தாரதப்பட்டைகள் முழக்கம் ஆகியவை இடம்பெற்றன. பூப்பல்லக்கில் விநாயகர் ஊர்வலம் வந்தது அனைவரையும் கவர்ந்தது. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினரும், சிலைகளை பாதுகாப்பாக கடலில் கரைக்க மெரைன் காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
