Religion
கடலில் கரைக்க வாகனங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

விழுப்புரம்: விநாயகர் சதுர்த்தி முடிவடைந்து, விழுப்புரத்தில் நேற்று கடலுார் கடலில் கரைக்க விநாயகர் சிலைகள் ஊர்வலமாக வாகனங்களில் புறப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, கடந்த 14ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில், 3 அடி முதல் 12 அடி வரை மொத்தம் 1,875 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இந்நிலையில் விழுப்புரத்தில், இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி உட்பட பல அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், 3வது நாளான நேற்று கடலுார் தேவனாம்பட்டினம் கடலில் கரைப்பதற்காக டிப்பர் டிராக்டர் மற்றும் லாரி, சரக்கு வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகிலிருந்து மாலை 3:00 மணிக்கு விநாயகர் சிலைகள் புறப்பட்டது. இந்த ஊர்வலத்தில் கோவில்கள், பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.
இந்த ஊர்வலம் விழுப்புரம் பழைய பஸ் நிலையம், எம்.ஜி., ரோடு, காமராஜர் வீதி, மேல்தெரு, வடக்கு தெரு, திரு.வி.க., வீதி வழியாக காந்தி சிலையை வந்தடைந்து, நேருஜி சாலை, கிழக்கு பாண்டி ரோடு வழியாக கடலுார் சென்றது. இந்த ஊர்வலத்தை யொட்டி, எஸ்.பி., மதிவாணன் மேற்பார்வையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் முக்கிய இடங்கள் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் தீவிரமாக கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.