Politics
“சைபர் குற்றங்கள் நவீன சட்டம் ஒழுங்கின் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளன” - முதல்வர் விஜய் பதிலுரை!

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 3ஆம் தேதி முதல்வர் விஜய் தாக்கல் செய்த காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தவெக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும், தான் வைத்த கேள்விகளுக்கு முதலமைச்சர் நேரடியாக பதில் சொல்ல வேண்டும் என்றும் சவால் விடுத்தார்.
அதற்கு முதல்வர் விஜய், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு திங்கட்கிழமை (07-09-26) பதிலளிப்பதாகவும், பதிலளிக்கும் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து ஓடிவிட கூடாது என்றும் திமுகவை கிண்டலடித்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், 3 நாள் விடுமுறைக்குப் பின் தமிழக சட்டப்பேரவை இன்று (07-09-26) கூடியது. இந்த கூட்டத்தில் வணிகவரி - பத்திரப்பதிவு - சுற்றுச்சூழல் - வனத்துறை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
அதற்கு முன்னதாக சட்ட ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதிலளித்தார். அதில் அவர், “ஒரு மாநிலத்தின் முன்னேற்றம் என்பது சாலைகளை அமைப்பது மட்டுமோ, தொழிற்சாலைகள் வருவதாலோ தீர்மானிக்கப்படுவது இல்லை. அந்த மாநிலத்துடைய குடிமகன்கள் எவ்வளவு பாதுகாப்பாகவும், பயமில்லாமலும் வாழ்கிறார்கள் என்பதில் தான் உண்மையான முன்னேற்றம் இருக்கிறது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தால் தொழில் முதலீடுகள் வரும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும், சுற்றுலாத்துறை வளரும், பெண்களும் மற்றும் இளைஞர்கள் சுதந்திரமாக வேலைவாய்ப்பில் பங்கேற்பார்கள். அதனால் காவல்துறை வெறும் குற்றவாளிகளை கைது செய்யும் அமைப்பு மட்டுமல்ல, ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் சமூக அமைதிக்கும், முதலீட்டு சூழலுக்கும், மக்களின் நம்பிக்கைக்கும் அடித்தளமாக விளங்கும் ஒரு முக்கியமான அமைப்பாகும்.
சட்டத்த்தை மதித்து நடப்பவர்களுக்கு காவல்துறை உற்ற நண்பனாகவும், சட்டத்தையும், பிறரின் உரிமைகளையும் மீறுபவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் எதிரியாகவும் இருக்க வேண்டும். ஒரு காவலர் இந்த இரண்டு பண்புகளையும் கொண்டவராக இருக்க வேண்டும். சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு காவல்துறையினர் எந்தவித அச்சமும், இடையூறுமின்றி தங்களது பணியை நேர்மையாகவும் துணிச்சலாகவும் மேற்கொள்ளக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு இந்த அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் என யாராக இருந்தாலும் எந்த அரசியல் அதிகாரத்திற்கும் காவல்துறையின் சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் தேவையற்ற தலையீடு இருக்கக் கூடாது என்பதை கடுமையாக வலியுறுத்தியுள்ளேன். குற்றவாளி யாராக இருந்தாலும், எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும், நடவடிக்கை வேண்டும் என்பதும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதுமே இந்த அரசின் நிலைப்பாடு. இந்த அவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் சட்ட ஒழுங்கு நிலை குறித்து பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இந்த அரசை குறை கூறும் நோக்கத்தில் கூறியவர்களின் கருத்தை கூட, மக்களின் பாதுகாப்பு குறித்த அவர்களின் கவலையையும் அக்கறையையும் இந்த அரசு மிகுந்த பொறுப்புணர்வுடன் எடுத்துக்கொள்கிறது. உள்நோக்கத்துடன் கூடிய கருத்தாக இருந்தாலும் கூட அதிலும் உண்மை இருக்கிறதா? என பொறுப்புடன் பரிசீலித்து ஏற்க வேண்டியதில் ஏற்பதில் எந்த பாகுபாடும் காட்ட மாட்டோம்.
நமது தமிழ் மரபியலில் நல்லாட்சிக்கும் நீதிக்கும் மிக உயர்ந்த இடம் வழங்கப்பட்டுள்ளது. சட்ட ஒழுங்கு எப்படி செயல்பட வேண்டும் என்று நமது திருவள்ளுவர் அன்றே, யாரிடமும் சார்பில்லாமல் நன்றாக ஆராய்ந்து நடுநிலையுடன் நீதி வழங்குவதே முறையான ஆட்சி என்று கூறியுள்ளார். தந்தை பெரியார் சமூக நீதியை வலியுறுத்தினார், காமராஜர் நேர்மையான நிர்வாகத்தை வலியுறுத்தினார், பேரறிஞர் அண்ணா மக்கள் நல ஆட்சியை வலியுறுத்தினார். எம்.ஜி.ஆர், ஏழை, எளிய மக்களின் நலனை தனது ஆட்சியின் மையமாக கொண்டிருந்தார். இந்த மிகப்பெரிய ஆளுமைகளின் சிந்தனைகளையும் ஒருங்கிணைத்து பார்க்கும் போது காவல்துறை என்பது அதிகாரத்தின் அடையாளமாக இருக்கக் கூடாது. அது மக்களின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாகிறது. குற்றத்தை பார்க்கும் பார்வை மாற்றம் வேண்டும். ஒரு குற்றம் நடைபெற்றுவிட்டது என்பதற்காக மட்டுமே ஒட்டுமொத்த மாநிலத்தின் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என சொல்ல முடியாது. தனிப்பட்ட குற்ற சம்பவத்திற்கும் மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்ட ஒழுங்கு நிலைக்கும் வேறுபாடு இருக்கிறது. ஒரு குற்றம் நடைபெற்றுவிட்ட பிறகு அதற்கான பொறுப்பை அரசு மீது சுமத்தி மற்றவர்கள் ஒதுங்கிவிட முடியாது. ஏனென்றால் அனைத்து குற்றங்களும் கடந்த 100 நாட்களில் தோன்றியது அல்ல. ஒவ்வொரு குற்றத்திற்கு பின்னாலும் குடும்ப பிரச்சனை இருக்கலாம், சொத்து தகராறு இருக்கலாம், முன்விரோதம் இருக்கலாம், பழிவாங்கும் மனநிலை இருக்கலாம், போதைப் பொருள் பயன்பாட்டின் தாக்கமாகவும் இருக்கலாம்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட சட்டத்தின் மீது பயமில்லாதது, சிலரின் ஆதிக்கத்தின் கீழ் காவல்துறையின் செயல்பாடு, போதை கலாச்சார வளர்ச்சி போன்றவைகளும், சமூக கட்டுபாடு குறைதல், சாதி அடையாளம், நிலம் மற்றும் அதிகாரத்தின் மீதான போட்டி, கலப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு, உள்ளூர் அதிகாரப் போட்டி, அரசியல் மற்றும் பொருளாதாரம் மீதான ஆதிக்கம், சமூக வலைத்தளங்களில் தாக்கம் போன்ற பல்வேறு சமூக காரணிகளும் குற்றங்களுக்கு பின்னணியாக இருக்கலாம். எனவே தான் 30.07.2026 அன்று நடந்த காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் காவல்துறை பணி என்பது குற்றவாளிகளை கைது செய்வது என்பதுடன் முடிந்துவிடக்கூடாது குற்றம் உருவாகும் சூழலை கண்டறிந்து அந்த சூழலையே மாற்றி குற்றம் நடைபெறுவதற்கு முன்பே தடுப்பதே நவீன காவல்துறையின் இலக்காக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன். இதற்காக ஒவ்வொரு காவல்நிலையமும் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு வார்டிலும், ஒவ்வொரு தெருவிலும் நிலவும் பிரச்சனைகளை குறித்து காவல் துறையினர் முன்கூட்டி அறிந்திருக்க வேண்டும் என்றும் காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று சட்டம் ஒழுங்கு என்பது தெருவில் நடைபெறும் குற்றங்களுடன் மட்டும் முடிவதில்லை. நாம் டிஜிட்டல் உலகத்திற்குள் நுழைந்துவிட்டோம். அதனால் சைபர் குற்றங்களும் நவீன சட்டம் ஒழுங்கின் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளன. இணைய மோசடி போலி, முதலீட்டு திட்டங்கள், ஓடிபி மற்றும் வங்கி மோசடிகள், போலி வேலைவாய்ப்பு, சமூக ஊடக மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொழில்நுட்பத்தின் வாயிலாக நடைபெறுகின்றன. இதற்கு காரணம் தொழில்நுட்பம் மட்டுமல்ல டிஜிட்டல், கல்வி அறிவு குறைவு, அவசரமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற மனநிலை, சரிபார்க்காமல் முதலீடு செய்வது, முதியோருக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த போதிய அறிமுகம் இல்லாமை போன்ற காரணிகளும் சைபர் குற்றங்களுக்கு வாய்ப்பளிக்கின்றன. எனவே சைபர் குற்றங்களை தடுப்பதற்கு காவல் துறையின் தொழில் நுட்ப திறனை மட்டும் அதிகரிப்பது போதாது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் முதியோர் வரை அனைவருக்கும் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த அடிப்படை கல்வி வழங்கப்பட வேண்டும். காவல்துறை, வங்கிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்படும் ஒரு வலுவான சைபர் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். ஒரு குற்றவாளியை கைது செய்வது காவல் துறையின் வெற்றி, ஆனால் ஆயிரம் பேர் அந்த குற்றத்திற்கு இறையாகாமல் தடுப்பது அதைவிட பெரிய வெற்றி. நாம் நமது காவல்துறையை தகவல் சார்ந்த காவல்துறை, தொழில் நுட்பம் சார்ந்த காவல்துறை, மக்களுடன் இணைந்த காவல்துறை, குற்றத்தை முன்கூட்டியே தடுக்கும் காவல்துறை, சட்டத்தின் முன் நடுநிலையாக செயல்படும் காவல்துறை என்ற புதிய பரிமாணத்தில் உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒவ்வொரு ஒவ்வொரு காவல் நிலையமும் கிரைம் மேப்பிங் மற்றும் பிரிவென்டிவ் பாலிசிங் முறையில் செயல்பட தேவையான வழிகளை ஆராய்ந்து இந்த அரசு செயல்படுத்தும்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)