Arts, culture, entertainment and media
டாஸ்மாக் கடையை திறக்க விடாமல் பெண்கள் முற்றுகை
திருச்சி:துறையூர் அருகே, டாஸ்மாக் கடையை திறக்க விடாமல், நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், முற்றுகை போராட்டம் நடத்தினர்.
திருச்சி மாவட்டம், நரசிங்கபுரத்தில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை, குடியிருப்புகளுக்கு அருகில் உள்ளதால், அப்பகுதியில் உள்ள பெண்கள், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், மது குடிப்போரால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில், குடிப்பவர்கள் போதையில், அப்பகுதியில் உள்ள வீட்டு வாசலில் படுத்து விடுகின்றனர். இதனால், டாஸ்மாக் கடை பகுதியில் உள்ள, 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தினமும் அவஸ்தைகளை சந்தித்து வருகின்றனர்.
அந்த கடையை அகற்ற பலமுறை கோரிக்கை விடுத்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், நேற்று மதியம், டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், கடையை திறக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அப்போது, மதுக்கடையை அகற்ற வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்ததால், துறையூர் தாசில்தார் அலுவலகத்தில், மூன்று நாட்களுக்குள் பேச்சு நடத்தப்படும், ஒரு மாதத்தில் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்தனர். இதையடுத்து மாலை, 3:00 மணிக்கு போராட்டம் கைவிடப்பட்டது.