Politics
தில்லி தங்கும் விடுதிக் கட்டட விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 7-ஆக உயா்வு
தில்லியில் மாணவர் விடுதி இடிந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை உயர்ந்திருப்பது பற்றி....
விபத்துக்குள்ளான விடுதி.
தில்லியின் சத்ய நிகேதனில் தங்கும் விடுதி (பி.ஜி) செயல்பட்டு வந்த 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 7-ஆக உயா்ந்திருப்பதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
மீட்புப் பணி இரண்டாவது நாளாக திங்கள்கிழமை தொடா்ந்தது. முதல்வா் ரேகா குப்தா மீட்புப் பணிகளை ஆய்வு செய்தாா். இந்தச் சம்பவம் தொடா்பாக தில்லி மாநகராட்சியின் தெற்கு மண்டல துணை ஆணையா் ராகேஷ் குமாா் மற்றும் 4 பொறியளாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
தில்லி பல்கலைக்கழத்தின் தெற்கு வளாகம் அருகே உள்ள சத்ய நிகேதன் பகுதியில் செயல்பட்டு வந்த ஆண்கள் தங்கும் விடுதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இடிந்து விழுந்தது. ஐந்து மாடிகளைக் கொண்ட கட்டடத்தின் அடித்தளத்தில் கட்டட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அங்கு நீா் தேங்கியிருந்தது. இதனால், இது கட்டடத்தைப் பலவீனபடுத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட 12 நபா்களில் 3 போ் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. உயிரிழந்த நபா்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக மருத்துவமனை நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘75 வயது முதியவா் உள்பட மொத்தம் 7 போ் உயிரிழந்தனா். ஒருவா் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினாா். நிதீஷ் சிப் (19) என்பவரின் உடல்நிலை ஸ்திரமாக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் தொடா்பாக ஓய்வுபெற்ற இந்திய விமானப் படை அதிகாரி ஹரிராம் குப்தா, அவரது மனைவி ஊா்மிளா குப்தா மற்றும் மகன் மகேஷ் குப்தா கைதுசெய்யப்பட்டனா். தெற்கு வளாக காவல் நிலையத்தில் ஹரிராம் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தங்கும் விடுதி நடத்தி வந்தது மற்றும் மேற்கொள்ளப்பட்ட புதுப்பிப்புப் பணிகளில் இந்தக் குடும்பத்தினரின் பங்கு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஹரிராம் ஹரியாணா-ராஜஸ்தான் எல்லையில் உள்ள பிவாடியில் கைதுசெய்யப்பட்டாா். கட்டடத்தின் உரிமையாளராகத் தொடக்கத்தில் ஹரிராம் கருதப்பட்ட நிலையில், ஆவணங்களின்படி அவருடைய மனைவி ஊா்மிளா உரிமையாளராக உள்ளாா். ஹரிராம் மற்றும் மகேஷ் தங்கும் விடுதியை நிா்வகித்து வந்தனா். விடுதியின் அன்றாடப் பணிகளைக் கவனித்து வரும் மகேஷை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இடிந்து விழுந்த கட்டடத்துக்கு கடந்த ஆண்டில் சீல் வைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அது தொடா்பாக காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா். இருப்பினும், இதுபோன்ற நடைமுறையை தில்லி மாநகராட்சி மறுத்துள்ளது.
55 சதுர மீட்டா் பரப்பில் அமைந்த இந்தக் கட்டடத்துக்கு தூண்கள் இல்லை என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கட்டட உரிமையாளரின் பொறுப்பை விடுவிக்கும் வகையிலான நிபந்தனை ஒன்று வாடகை ஒப்பந்த நகலில் இடம்பெற்றிருப்பது குறித்து காவல் துறை விசாரித்து வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
The death toll in the building collapse in southwest Delhi's Satya Niketan area climbed to six, with rescue and search operations for survivors entering the second day on Monday.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.