Arts, culture, entertainment and media
டாஸ்மாக் கடை ஊழியர்கள் ‘திடீர்’ போராட்டம்
காட்டுமன்னார்கோவில்: காட்டு மன்னார்கோவிலில் டாஸ்மாக் கடையை, மூடி ஊழியர்கள், ‘திடீர்’ போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டுமன்னார்கோவில் அடுத்த தெற்கிருப்பு பைபாஸ் சாலை அருகில் (எண்: 2441)0 அரசு டாஸ்மாக் கடை உள்ளது.
இந்த கடையில் மூன்று மேற்பார்வையாளர்கள் உட்பட, 15 பேர் வேலை செய்கின்றனர். நேற்று முன்தினம் அந்த கடைக்கு வந்த சிலர், குறைந்த விலைக்கு மதுவை கேட்டு விற்பனையாளர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும், அருகில் கிடந்த காலி பாட்டில்களை எடுத்து கடை மீது வீசினர். அட்டைகளை தீயிட்டு கொளுத்தி ரகளையில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த போது, டாஸ்மாக் கடையை தாக்கி, தீயிட்டு எரித்த நபர்கள், தப்பியோடிவிட்டனர்.
இதனால் மதுபானம் விற்பனை பாதிக்கப்பட்டது. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று காட்டுமன்னார்கோவில் டாஸ்மாக் ஊழியர்கள், தகராறில் ஈடுபட்டு, கடையை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி, கடையை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்பார்வையாளர் சங்கர் தலைமை தாங்கினார். மேற்பார்வையாளர்கள் செந்தில்குமார், தமிழ்செல்வன் உள்ளிட்ட விற்பனையாளர்கள், 15 பேர் பங்கேற்றனர். அதனால் நேற்று மதுபானம் கிடைக்காமல் குடி பிரியர்கள் அலைமோதினர்.