Religion
ரூ.5 கோடி விபத்து காப்பீடு முதல் மருத்துவ முகாம் வரை.. மதுரை கும்பாபிஷேகத்தில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடு.!

செப்டம்பர் 16 இரவு 10 மணி முதல் 17ஆம் தேதி இரவு 10 மணி வரை கோவிலை சுற்றி உள்ள முக்கிய வீதிகளில் கனரக,இருசக்கர வாகங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நாளை (வியாழக்கிழமை) குடமுழுக்கு விழா நடைபெறும் நிலையில், 7 வழிகளில் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
குடமுழுக்கை காணும் விதமாக சித்திரை வீதிகள், ஆவணி மூல வீதிகள், பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட 51 இடங்களில் பெரிய எல். இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
448 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு புதுமண்டபத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. குடமுழுக்கு முடிவடைந்த பிறகு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குடமுழுக்கு விழாவை காண வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 5 கோடி ரூபாய் அளவிலான விபத்து காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
கோயிலில் செப்டம்பர் 20 ஆம் தேதி வரை கட்டண தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு காலை 10 மணி முதல் அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். இதனிடையே அறிக்கை வெளியிட்டுள்ள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், திருக்குடமுழுக்கை காணவரும் பக்தர்களின் வசதிக்காக அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் கூடிய மருத்துவ உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குடமுழுக்கையொட்டி, 5 டன் பூக்களால் கோயில் அலங்கரிக்கப்படுகிறது. இதற்காக புது மண்டபத்தில் பூக்கள் கட்டப்பட்டு வருகின்றன.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்கு பின் செப்.17 ஆம் தேதி காலை 7.40 - 8.10 மணிக்குள் நடைபெறுகிறது. குடமுழுக்கை காண 80 ஆயிரம் முதல் 1 லட்சம் பக்தர்கள் வரை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடமுழுக்கு விழாவை காணும் விதமாக ஐந்து கோபுர நுழைவாயில் மூலம் ஏழு நுழைவாயிலாக பிரிக்கப்பட்டு 9000 பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டு 2000 பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளார்கள்.
நுழைவு வாயிலில் பிஸ்கட், மோர் பாக்கெட் உள்ளியவை அடங்கிய பிரசாத பை என்பது வழங்கப்பட இருக்கிறது. ஆடி வீதிகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், 25 மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் காணாமல் போவதை தடுப்பதற்கு அவர்களின் கைகளில் Tag இணைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மதுரை உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக 100 சிறப்பு பேருந்துகள் உள்ளூரில் இயக்கப்பட இருக்கின்றது.
செப்டம்பர் 16 இரவு 10 மணி முதல் 17ஆம் தேதி இரவு 10 மணி வரை கோவிலை சுற்றி உள்ள முக்கிய வீதிகளில் கனரக,இருசக்கர வாகங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சுமார் 6000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
