Politics
சினிமா பாணியில் வெறிக் கூச்சல்! சட்டமன்ற மரபை சிதைத்த முதல்வர்!

சட்டமன்றக் கூட்டத்தில், த.வெ.க. ஆட்சியின் காவல்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையின் மீதான விவாதத்தில் வியாழக்கிழமை பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, "த.வெ.க.வின் 100 நாள் ஆட்சியில் நடந்துள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், குற்றச் சம்பவங்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு முதல்வர் பதிலளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. திங்கள்கிழமை பதிலளிப்பதாகச் சொல்லிவிட்டு, சபையில் உட்காராமல் உடனே எழுந்து சென்றுவிட்டார் முதல்வர் விஜய். திங்கள்கிழமை யாரும் ஓடிவிடக்கூடாது' என்றும் நக்கலடித்திருந்தார்.
திங்கள்கிழமை சட்டமன்றம் கூடியதும் தனது பதிலுரையை வாசித்த முதல்வர் விஜய், த.வெ.க. ஆட்சியில் கடந்த 100 நாளில் நடந்த பிரச்சினைகளைப் பற்றி தி.மு.க. வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காமல், முந்தைய தி.மு.க. ஆட்சியில் நடந்த குற்ற சம்பவங்களையும், பேரவையில் தி.மு.க.வின் செயல்பாடுகளையும் பட்டியலிட்டு, அதுதான் பதில் என்பதைப்போல ஆவேசப்பட்டார்.
"தம்மிடம் 3 கோப்புகள் இருக்கிறது; அதனை ஓப்பன்பண்ண வெச்சிடாதீங்க' என்று ஏற்கனவே சொல்லி யிருந்ததால், இதுவரை வெளியில் வராத ஏதோ ஒரு பெரிய ஊழலை விஜய் அம்பலப்படுத்தப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கோப்புகள் குறித்தும், பார்ட்டி ஃபண்ட் குறித்தும் பேசிய விஜய், டாஸ்மாக் நிறுவனம் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை ஆகியவற்றில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து அமலாக்கத்துறை கொடுத்த புகாரில் என்ன சுட்டிக்காட்டப்பட்டி ருந்ததோ, அதைத்தான் தனது ஸ்டைலில் ஆவேசமாக பேசினார். குறிப்பாக, "கட்சி நிதி என்ற பெயரில் ஆட்சியில் தி.மு.க. இருந்தபோது லஞ்சம் வாங்கியது என்றும்... ஸ்டாலின், உதயநிதி மூலம் பெற்றனர் என்றும், அமலாக்கத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஒப்பந்தங்களுக்கு 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கமிஷன் லஞ்சமாக பெற்றனர்; பார் உரிமையாளர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றனர். தப்பிலிருந்து மாட்டிக்கொள்ளாமல் தப்பு செய்பவர்கள் தி.மு.க; தி.மு.க. இருக்கும் இடத்தில் தப்பே நடக்கும், தப்பு நடக்கும் இடத்தில் தி.மு.க. இருக்கும்.
போன ஆட்சியில் டாஸ்மாக்கை கையில் வச்சிருந்த அமைச்சர் இருக்காரே, அவரோட சேர்ந்து ஐ.ஏ.எஸ். ஆபீசர் உள்ளிட்ட அதிகாரிகள் சிலபேரும் அந்த விஷயத்துல ஈடுபட்டிருக்காங்க. அது இல்லாம சிலரின் பேரும் இந்த அதுல மென்ஷன் ஆகியிருக்கு. அதுல ரத்தீஷ்னு ஒருத்தர் பல ஆபீசர்களோட டிரான்ஸ்ஃபரை, குறிப்பா டி.ஆர்.ஓ. லெவல்ல ஆபீசர்களோட டிரான்ஸ் ஃபரை எல்லாம் டிசைட் பண்ணியிருக்காரு'' என்று தொடங்கி, அமலாக்கத்துறை என்ன குற்றச்சாட்டு களை முன்வைத்ததோ, அதையே தனது பாணியில் ஆவேசப்பட்டார் விஜய்.
மற்றபடி, நாங்கள் கண்டுபிடித்தோம் என புதிதாக எந்த ஒரு ஊழலையும் அம்பலப்படுத்த வில்லை விஜய். மேலும், சர்க்காரியா கமிஷன் குறித்து விவரித்தார். "இதெல்லாம் புளித்துப்போன விஷயம். இதே சட்டமன்றத்தில் பலமுறை பேசப்பட்டு அதற்கு தகுந்த விளக்கத்தையும் கலைஞர் தந்துவிட்டார். புளித்துப்போன, நாட்டு மக்களுக்கு தெரிந்துபோன, சர்க்காரியா கமிஷனை பத்தி பேசுவதுதான் த.வெ.க. ஆட்சியில் மோசமாக இருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு முதல்வரின் பதிலா?' என்ற கேள்வி எழுகிறது.
தொடர்ந்து பேசிய விஜய், "த.வெ.க.வினர் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி இந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், தி.மு.க. ஆட்சியில் தி.மு.க.வினர் அனுமதி பெற்ற பிறகே வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குற்றங்களில் தொடர்புடைய பலர், தி.மு.க. ஆட்சியில் காப்பாற்றப்பட்டனர். சட்டம் ஒழுங்கு சீரழிவு பற்றிப் பேசும்முன் தி.மு.க.வினர் கண்ணாடியை பார்த்துக்கொள்ள வேண்டும். தி.மு.க. செய்த தவறுகளை மக்கள் மறந்துவிட வில்லை. தமிழக மக்களின் நினைவாற்றல் மிகவும் வலிமையானது'' என்றார்.
பொதுவெளியில் தி.மு.க. ஆர்.எஸ். பாரதி பேசியது குறித்து சட்டமன்றத்தில் விமர்சித்தார் விஜய். பொதுவாக, வெளியில் வைக்கப்படும் விமர்சனம் பற்றி பேரவையில் பேசுவது மரபல்ல, ஆனாலும் பேசினார் விஜய். ஆக, மொத்தத்தில், தி.மு.க.வை சீண்டும் வகையிலும், நக்கலடித்தும் பேசியதைத் தவிர, தி.மு.க.வுக்கு செக் வைக்கும் வகையில் விஜய்யின் பதிலுரை அமையவில்லை. விஜய்யின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதில் சொல்ல தி.மு.க.வினர் அனுமதி கேட்டனர். அனுமதி கிடைக்கவில்லை. இதனால் பேரவையில் ஒரே ரகளையாக இருந்தது. அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகரை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் தர்ணா செய்தனர். அப்போதும் அனுமதி கிடைக்காததால், உதயநிதி தலைமையில் வெளிநடப்பு செய்தனர் தி.மு.க.வினர்.
வெளியில் வந்த உதயநிதி பத்திரிகை யாளர்களை சந்தித்தார். அப்போது, "கடந்த வியாழக்கிழமை பேரவையில் நான் பேசும்போது, அரசுக்கு 15 கேள்விகள் வைத்திருந்தேன். குறிப்பாக முதலமைச்சரிடம் நேரடியாகக் கேள்விகள் கேட்டேன். இதற்கெல்லாம் பதில் சொல்லுங்கள். டைவர்ஷன் பண்ணாமல், நேரடியாக நான் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள் என கேட்டேன். ஆனால், இன்றைக்கு (திங்கள்கிழமை) கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் பேசினார் முதலமைச்சர். அதில் முதல் 10 முதல் 15 நிமிடங்கள், காவல்துறையின் சார்பாக என்னென்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம் என்பதைப் பட்டியலிட்டு வந்தார். நாங்களெல்லாம் அமைதியாக உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் 15-வது நிமிடத்திற்குப் பிறகு, எந்தவித ஆதாரமும் இல்லாத குற்றச் சாட்டுகளை எங்கள் மீது வைக்க ஆரம்பித்தார். மீண்டும் தி.மு.க. ஆட்சியே நடக்கிறது என்ற நினைப்பில் முதலமைச்சர் பொய்யான குற்றச் சாட்டுகளை வைத்தார். சில கட்சிக் கூட்டங்களில் எங்களுடைய உறுப்பினர்கள் வெளியில் பேசி யதையும், இந்த அரசு மீது வைத்த விமர்சனங் களையும் உள்ளே கொண்டுவந்து பேசி, அதையெல்லாம் அவைக் குறிப்பில் பதிவேற்றம் செய்ய ஆரம்பித்தார். இதற்குப் பதில் சொல்ல வேண்டும், எங்களுக்கு வாய்ப்புத் தாருங்கள் என சபாநாயகரிடம் கேட்டோம். வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் வெளிநடப்பு செய்தோம். சட்டம்-ஒழுங்கு சம்பந்தமாக நாங்கள் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல், வெறும் பஞ்ச் டயலாக், ரீல்ஸ் எடுக்க உதவும் பாணியில்தான் அவரது பதில் இருந்தது.''
ஆக மொத்தத்தில், சினிமா பாணியில் வெறிக்கூச்சலிட்டு சட்டமன்ற மரபை சிதைத்துள்ளார் முதல்வர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)