Lifestyle and human interest
”நண்பேன்டா...”; ”ஆபத்தில் உதவுபவனே அறிய நண்பன்”; நிரூபித்த நரேந்திர மோடி

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் அஸ்கரலி வோரா (81). இவரும், பிரதமர் நரேந்திர மோடியும் பள்ளி கால தோழர்கள் ஆவர். கடந்த காலங்களில் இருவரும் குஜராத்தில் உள்ள வாத்நகர் பிஎன் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள்.
அஸ்கரலிக்கு, மிரா பயந்தர் பகுதியில் சொந்தமாக 2,810 சதுர மீட்டர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அவர் கடந்த 1989ம் ஆண்டில் வாங்கினார். இந்நிலையில், கடந்த 2011ம் ஆண்டு 2 கட்டுமான நிறுவனங்கள் போலி ஆவணங்கள் மூலமாக இந்த நிலத்தை அபகரித்துள்ளது. இந்த நில அபகரிப்பில் பாஜக எம்எல்ஏ நரேந்திர மேத்தாவிற்குத் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அஸ்கரலி, இது சம்பந்தமாக நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே, நிலத்தை மீட்கத் தனது பள்ளி கால நண்பர் பிரதமர் நரேந்திர மோடியிடம் உதவி கேட்க அஸ்கரலி முடிவெடுத்தார்.
அதன்படி, கடந்த 8 ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை, அஸ்கரலி சந்தித்து சம்பவம் குறித்து எடுத்துக் கூறினார். அதனைக் கேட்ட பிரதமர் நரேந்திர மோடி, நிச்சயம் உதவி செய்வதாகத் தெரிவித்திருந்தார். பின்பு, இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கப் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, அஸ்கரலி வோராவிடம் இருந்து அபகரிக்கப்பட்ட நிலம் மீண்டும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாஜக எம்எல்ஏ நரேந்திர மேத்தா சர்ச்சைக்குரிய நிலத்தை விட்டுக் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, அஸ்கரலிக்கு எதிராகக் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரையும் திரும்பப் பெறுவதாக பாஜக எம்எல்ஏ நரேந்திர மேத்தா அறிவித்துள்ளார். இதனால் அஸ்கரலி வோரா மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார்.
இது சம்பந்தமான தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்நிலையில், இணைய வாசிகள் பலரும், ”நண்பேன்டா...”, ”ஆபத்தில் உதவுபவனே அறிய நண்பன்” எனப் பதிவிட்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)