Lifestyle and human interest
மோடியை நேரில் சந்தித்த பள்ளித் தோழர்-பாஜக எம்.எல்.ஏ மீது பகிரங்கப் புகார்

பிரதமர் நரேந்திர மோடியை அவரது பள்ளித் தோழர் நேரில் சந்தித்து, தனக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட விவகாரத்தில் நீதி கேட்டு மனு அளித்துள்ள அண்மை நிகழ்வு மகாராஷ்டிர அரசியல் வட்டாரத்தில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.
குஜராத் மாநிலம் வட்நகரில் உள்ள பி.என். உயர்நிலைப் பள்ளியில் சிறுவயதில் பிரதமர் மோடியுடன் ஒன்றாக படித்தவர் அஸ்கரலி வோஹ்ரா. தற்போது இவர், மகாராஷ்டிராவின் மீரா ரோடு பகுதியில் வசித்து வருகிறார். இவருக்குச் சொந்தமாகப் பயந்தர் கிழக்கு பகுதியில் 1989-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக வாங்கப்பட்ட சுமார் 2,810 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு பிரம்மாண்ட நிலம் உள்ளது. இந்த நிலத்தை, கடந்த 2011-ஆம் ஆண்டில் போலியான ஆவணங்கள் மூலம் இரண்டு முன்னணி கட்டுமான நிறுவனங்கள் தங்களுக்குத் தெரியாமலேயே ஆக்கிரமித்துவிட்டதாக அஸ்கரலி குற்றம் சாட்டியுள்ளார்.
அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், இந்த நில ஆக்கிரமிப்பு விவகாரத்தின் பின்னணியில் பாஜகவின் முக்கியப் புள்ளியும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான நரேந்திர மேத்தாவுக்குத் தொடர்பு இருப்பதாக அஸ்கரலி பிரதமரிடமே நேரில் போட்டுடைத்துள்ளார். இது தொடர்பாக கடந்த 2015-லேயே காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இருப்பினும், அரசியல் செல்வாக்குக் காரணமாக உள்ளூர் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கடந்த பல ஆண்டுகளாக அஸ்கரலியின் புகார்கள் மீது எவ்விதத் தீர்வும் காணாமல் இழுத்தடித்து வந்துள்ளன.
அரசாங்க அமைப்புகள் கைவிட்ட இக்கட்டான சூழலில்தான், அஸ்கரலி தனது பழைய பள்ளித் தோழரான பிரதமர் மோடியை டெல்லியில் நேரில் சந்தித்து, இந்த நில அபகரிப்பு ஊழல் குறித்து மத்தியப் புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த உத்தரவிடுமாறு மனு அளித்துள்ளார்.
தனது பழைய நண்பனின் குமுறலைக் கேட்ட பிரதமர் மோடி, அதற்கு உடனடியாக நேர்மறையான பதிலை அளித்து ஆறுதல் கூறியுள்ளார். பிரதமரின் இந்த தலையீட்டை அடுத்து, தூங்கிக் கொண்டிருந்த உள்ளூர் நகராட்சி நிர்வாகம் தற்போது அசுர வேகத்தில் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. புகாரில் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனங்கள் அனைத்தும் வரும் செப்டம்பர் 16-ஆம் தேதிக்குள் தங்களின் அசல் ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உள்ளூர் நிர்வாகம் அதிரடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)