Politics
லண்டனில் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்த முதல்வர் விஜய்!

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டனுக்குக் கடந்த 10ஆம் தேதி (10.09.2026) இரவு புறப்பட்டுச் சென்றார். இந்த அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக, பல்வேறு புதிய தொழில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனையடுத்து முதலமைச்சர் விஜய் அங்கிருந்து விமானம் மூலம் இன்று (16.09.2026) சென்னைக்குப் புறப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பாக, அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு வெளியே நேற்று (15.09.2026) அதிக அளவில் ரசிகர்கள் திரண்டிருந்தனர். அதோடு முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்து, அவருடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், பின்னர் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனால், நேற்று விஜய்யை நேரில் சந்திக்க முடியாமல் பல ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், முதலமைச்சர் விஜய் இன்று அங்கிருந்து புறப்படுவதற்கு முன்பாக, அவரை சந்திக்க ரசிகர்கள் மீண்டும் திரண்டிருந்தனர்.
அதோடு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காகவும், ஆட்டோகிராப் வாங்குவதற்காகவும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். இந்நிலையில் அங்கிருந்தவர்கள் பலருக்கும் முதலமைச்சர் விஜய் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்ததுடன், புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து, முதலமைச்சர் விஜய் அங்கிருந்து புறப்பட்டுள்ளார். நாளை (17.09.2026) காலை 08.05 மணியளவில் அவர் சென்னை வந்தடைய உள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)