Religion
விமர்சையாக நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தேனி, கம்பம், போடியில் திரளாக பொதுமக்கள் பங்கேற்பு

தேனி: தேனி, கம்பம், போடி பகுதியில் நேற்று விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் விமர்சையாக நடந்தது.
தேனியில் பெரியகுளம் ரோடு பொம்மையகவுண்டன்பட்டி சாலை பிள்ளையார் கோயில் அருகில் இருந்து நேற்று மதியம் ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலத்தை சிவமயானந்தா சரஸ்வதி சுவாமிகள் துவக்கி வைத்தார். நகர தலைவர் சிவராமன் தலைமை வகித்தார். அமைப்பு நிறுவனர் ரவி, மாவட்ட தலைவர் ராமராஜ் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் ராமமூர்த்தி, கோவிந்த ராஜ், கனகுபாண்டி உள்ளிட்டோர் ஊர்வலத்தை ஒருங்கிணைத்தனர். 250 சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று அரண்மனைப்புதுார் முல்லைப்பெரியாற்றில் விஜர்சனம் செய்யப்பட்டன.மாலையில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் பொம்மையகவுண்டன்பட்டியில் இருந்து அரண்மனைப்புதுார் வரை சென்றது. நுாறுக்கும்மேற்பட்ட சிலைகள் ஊர்வலத்தில் பங்கேற்றன. வர்த்தகபிரமுகள் பத்ரிநாத் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் உமையராஜன், மாவட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தனர். நிர்வாகிகள் திலகர், ராம்கண்ணன் ஊர்வலத்தை ஒருங்கிணைத்தனர்.
விதவிதமான விநாயகர் சிலைகள் கம்பத்தில் நேற்று காலை ஹிந்து முன்னணி சார்பில் மாவட்ட தலைவர் மாயலோகநாதன் தலைமையில் 80 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக சென்றன. முன்னதாக அரச மரத்தில் இருந்து ஊர்வலம் கிளம்பி, பஸ் ஸ்டாண்ட் ரோடு, மாரியம்மன் கோயில் கிழக்கு வீதி, வ.உ.சி. திடல் , பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெரு, பார்க் ரோடு, நகராட்சி வீதி வழியாக முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டது. போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.
உத்தமபாளையம் : உத்தமபாளையத்தில் ஹிந்து முன்னணி சார்பில் நடந்த ஊர்வலத்தில் மாவட்ட ஹிந்து இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் ராம் செல்வா தலைமையில் 30 விநாயகர் சிலைகள் பங்கேற்றன. ஞானம்மன் கோயில் அருகே துவங்கி மெயின் ரோடு, வடக்கு ரத வீதி வழியாக முல்லைப் பெரியாற்றில் கரைக்கப் பட்டது.
போடி: இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் பரமசிவன் கோயில் அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜபாண்டியன் தலைமையில் நடந்தது. இந்து முன்னணி தெற்கு மாவட்ட செயலாளர் கணேஷ்குமார், தெற்கு மாவட்ட தலைவர் சுந்தர் முன்னிலை வகித்தனர்.
நகர பொதுச் செயலாளர் கண்ணன், செல்வக்குமார் வரவேற்றனர். நகர, ஒன்றிய பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட 40 விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபராதனைகள் நடந்தது. விழாவில் பா.ஜ., மாவட்ட செயலாளர் ராஜபாண்டி, முன்னாள் மாவட்ட தலைவர் பாண்டியன், துணைத் தலைவர் மோகன்தாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், விவசாய அணி மாவட்ட தலைவர் தண்டபாணி, போடி நகர தலைவர் சித்ராதேவி, பொதுச்செயலாளர் சிவ குருநாதன், ஆர்.எஸ்.எஸ். மாநில ஒருங்கிணைப்பாளர் உமாராணி, த.வெ.க., வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ்உட்பட பலர் பங்கேற்றனர்.