Religion
135 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

சூலூர்: சூலூர் மற்றும் அன்னுார் சுற்றுவட்டார பகுதிகளில், 135 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
நாடு முழுவதும் வரும், செப்., 14ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப் பட உள்ளது. இதையொட்டி, இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் காங்கயம் பாளையத்தில் நடந்தது.
மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்து பேசுகையில், 'சூலூர், சோமனூர் வட்டாரத்தில், 95 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து மூன்று நாட்கள் வழிபட வேண்டும், என்றார்.
மாநில நிர்வாக குழு உறுப்பினர் செந்தில் பேசுகையில், முதல் நாள் இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் ஜியின், நூற்றாண்டு விழா நடத்த வேண்டும். இரண்டாம் நாளில் தாய்மார்கள் தினத்தையும், மூன்றாம் நாளில், போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலமும் நடத்த வேண்டும்' என்றார்.
மாவட்ட செயலாளர் மதன்குமார், நகர பொறுப்பாளர்கள் பூபதி, ஜெகதீஷ், சரத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அன்னூர் அன்னூர் ஒன்றிய இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கோவை கோட்டச் செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்து பேசுகையில், நாத்திகவாதம், மதமாற்றம், பயங்கரவாதம், ஆகியவற்றை எதிர்த்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி, இந்துக்களை ஒற்றுமைப்படுத்தி வருகிறது.
விநாயகர் சதுர்த்தி விழாவில் அதிக அளவில் மக்கள் பங்கேற்கச் செய்ய வேண்டும்,' என்றார். 40 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது, வரும் 15ம் தேதி சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கவும், 16ம் தேதி பகல் 2:30 மணிக்கு, அன்னூர் பாத விநாயகர் கோவில் முன்புறம் இருந்து ஊர்வலம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ்மோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.