Politics
முக்கொம்பு வந்தடைந்தது காவிரி நீர்
திருச்சி: மேட்டூர் அணையில் இருந்து, செப்., 1ம் தேதி திறக்கப்பட்ட காவிரி நீர், நேற்று முக்கொம்பு வந்தடைந்தது.
கர்நாடக மாநில அரசு, காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்காததால், மேட்டூர் அணை, தண்ணீர் இன்றி வறண்டது. இதனால், டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12ல் தண்ணீர் திறக்கப்படவில்லை. தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள், ஆணையம் மற்றும் நீதிமன்ற உத்தரவால், கர்நாடகாவில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து செப்., 1ல் தண்ணீர் திறக்கப்பட்டது.
தற்போது, மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு, 7,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு, ஈரோடு, கரூர் மாவட்டங்களை கடந்து, திருச்சி மாவட்டம், முக்கொம்பு மேலணைக்கு நேற்று வந்தடைந்தது. கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்கு, நாளை தண்ணீர் திறக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது.