Politics
6 கோடி செலவில் மேட்டூர் டிராமா! - போட்டுத் தாக்கும் சீமான்!

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வந்த முதல்வர் ஜோசப் விஜய், மூதாட்டிகளை கட்டிப்பிடித்தும், விவசாயிகளைப் போல பச்சைத்துண்டு அணிந்தும் வேடமிட்டது பல தரப்பிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் விஜய் தனி விமானம் மூலம் சேலத்துக்கு வந்து, அங்கிருந்து சாலை வழியாக வேன் மூலம் மேட்டூர் அணைக்கு வந்து, 8 மேல்மட்ட மதகுகள் வாயிலாக தண்ணீரை திறந்துவைத்தார். தொடர்ந்து 45 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் வந்த முதல்வரை பத்திரிகையாளர்கள் நெருங்காதபடி பார்த்துக்கொண்டனர். கேமராமேன்களை மட்டுமே அனுமதித்தனர்.
இந்நிகழ்ச்சிக்காக வந்த முதல்வர் விஜய்யை, விவசாயிகள் வரவேற்று பச்சைத்துண்டு அணிவித்தனர். இதற்காக தமிழக மக்கள் தொடர்பு செய்தித்துறையினர், உள்ளூரைச் சேர்ந்த சில விவசாயிகளை காரிலேயே அழைத்து வந்திருந்தனர். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, செல்லும் வழியில், சின்னக்காவூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் வீட்டிற்கு சென்ற முதல்வர், ராமசாமியின் அக்காள் செல்லம் என்ற மூதாட்டிக்கு தன்னிடமிருந்த புதிய கூலிங் கிளாஸை அணிவித்தார். பட்டுச்சேலை, வேட்டியையும் பரிசளித்தார். அதனையடுத்து, திமிரிக்கோட்டை பகுதியிலும் மூதாட்டிகளை சந்தித்து நலம்விசாரித்தார். இவற்றையெல்லாம் ரீல்ஸ்களாக வைரலாக்கியது விஜய் தரப்பு!
இதற்கு முன்பு இருந்த முதல்வர்கள் மேட்டூர் அணையை திறக்க வரும்போது, சேலம் மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளைத் திறந்துவைப்பதும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதும், நலத்திட்ட உதவிகள் வழங்குவதும் நடக்கும். இந்தமுறை அப்படியான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. சொந்தக்கட்சி எம்.எல்.ஏ.க் களுடன்கூட அவர் பேசுவதைத் தவிர்த்தார்.
மேட்டூரைச் சேர்ந்த தனியார் கல்லூரி உதவிப்பேராசிரியர் ராஜசேகரன் கூறுகையில், "முதல்வர் ஜோசப் விஜய், மேட்டூர் அணையைத் திறந்து வைத்தபிறகு, விவசாயி வீட்டிற்குச் சென்று மூதாட்டிக்கு கூலிங் கிளாஸ் அணிவித்தது, சாலையோர மூதாட்டிகளைக் கட்டியணைத்து நலம் விசாரித்தது எல்லாமே செட்டப் நிகழ்ச்சிகள்தான்! தன்னை இன்னொரு எம்.ஜி.ஆர். போல சித்தரிக்க முயல்கிறார் ஜோசப் விஜய்.
அதேபோல், முதல்வருக்கு பச்சைத்துண்டு அணிவித்த நபர், உண்மையில் விவசாயியே அல்ல, அவர் நெல் வாங்கி விற்கும் புரோக்கர். ஜோதிடர் மற்றும் ரூட் மாஃபியாவின் ஆலோசனைப்படி முதல்வர் நடித்து விட்டுச் சென்றிருக்கிறார். முதல்வரைக் காணும் ஆசையில் தொண்டர் ஒருவர், அவர் சென்ற வாகனத்தினருகே சென்று தடுமாறிவிழுந்தபோது வாகனத்தை நிறுத்தாத முதல்வர், சாலையோர மூதாட்டிகளை நலம் விசாரித்ததை எப்படி நம்புவது?'' என்று கொந்தளித்தார்.
தமிழக விவசாயிகள் சங்க சேலம் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் கூறுகையில், "அணையில் தண்ணீர் திறந்தது மகிழ்ச்சியென்றாலும், குறுவை சாகுபடிக்கு 45 நாள்கள் தண்ணீர் திறப்பு போதாது. 95 நாட்களாவது தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மேட்டூர் அணையைப் புதிதாகக் கட்டி, திறக்கப்பட்டதுபோல தமிழக அரசு இந்நிகழ்வை பெரிய அளவில் விளம்பரப்படுத்துகிறது. விமான நிலையத்திலிருந்து மேட்டூர் அணை வரை 40 கி.மீ. தொலைவிற்கு சாலையின் இருபுறமும் பேரிகேட் வைத்ததற்கே 4 கோடி ரூபாய்க்கு மேல் செலவானதாக சொல்லப்படுகிறது. எங்களுக்கு இதுபோன்ற செயல்களில் உடன்பாடு இல்லை'' என்றார்.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மதுரையில் பேசியபோது இதுகுறித்து, "அந்த காலத்துல மேட்டூர் அணையை கட்டுனதுக்கே 6 கோடியோ, எட்டு கோடியோதான் செலவழிச்சிருப்பாங்க.
அந்த அணையை திறக்கப்போறதுக்கு 6 கோடி செலவழிச்சிப் போறது உலகத்துலயே நம்மதான்'' என்றவர், "ஒருத்தர் சட்டசபைல லாடு லபக்தாஸ் மாதிரி நின்னுக்கிட்டு, "சர்கார் பட போஸ்டரை கிழிக்கலைன்னா நீங்கதான் வந்திருப்பீங்கங்க'றாரு. "சர்கார்' பட போஸ்டருக்காகவா இவ்வளவு? அத்தனை மீனவன சுட்டுப்போட்டான், நிலத்தின் வளத்தையெல்லாம் கொள்ளையடிக்கிறான்... காவிரியில் தண்ணி வரல... கச்சத்தீவை மீட்காததால மீனவன் கொல்லப்படுறான்... ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு... இப்படி எவ்வளவோ நடந்தாலும் அதெல்லாம் பிரச்சனையில்ல, "சர்கார்' பட போஸ்டர்தான் பிரச்சனையாம். மதுரைய சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ., மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை அரசு கல்லூரியா மாற்றச் சொல்றான்... தற்குறிங்கறதே உங்களுக்கு பெருமைக்குரிய வார்த்தைதான்டா. நாங்க ஏதோ சொந்தக்காரங்களாச்சேங்கற மாதிரி, "போடா தற்குறிப்பயலே!'ன்னு செல்லமா சொல்ற மாதிரி சொல்லிட்டு இருக்கோம். இதுக்கு மேல வார்த்தை இல்ல. இன்னொருத்தன், தலைவர் அழகா சிரிக்கிறத பார்க்க ஒரு எல்.இ.டி. ஸ்க்ரீன் வேணுங்கறான். இதெல்லாம் எவ்ளோ பெரிய பிரச்சனை'' என்று கிண்டலாகவும், வேதனை யாகவும் பேசியிருந்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)