Politics
விஜய்க்காகக் கோடிகள்... விவசாயிக்குக் கானல் நீர்...

மேட்டூர் அணை திறப்பில் வீண் செலவு சர்ச்சை!
‘மேட்டூர் அணையிலிருந்து சம்பா சாகுபடிக்குத் தண்ணீர் திறக்கிறோம்’ என்கிற பெயரில், மக்கள் வரிப்பணத்தில் கோடிக்கணக்கான ரூபாயை வாரி இறைத்தும், வரலாறு காணாத வகையில் போலீஸ் படையைக் குவித்தும் த.வெ.க அரசு எல்லை மீறியிருப்பதாகப் பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.
காவிரி ஆற்றுப்படுகையின் உயிர்நாடியான மேட்டூர் அணையின் மூலம் 12 மாவட்டங்களில், 16 லட்சம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி கிடைக்கிறது. குறுவைச் சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டு தென்மேற்குப் பருவமழை பொய்த்ததால் திறக்க முடியவில்லை. இந்த நிலையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91 அடியை எட்டியதைத் தொடர்ந்து, சம்பாச் சாகுபடிக்காக செப்டம்பர் 1-ம் தேதி தண்ணீர் திறக்க அரசு முடிவுசெய்தது. `இதற்காக முதல்வர் விஜய் நேரில் வருவார்’ என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி விஜய் மேட்டூர் அணையைத் திறந்தார். ஆனால், இதற்காக 50 கிலோமீட்டருக்கு இரும்புத் தடுப்புகள் அமைத்து, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாரைக் குவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத நிலையில், இவ்வளவு அவசரமாகத் தண்ணீர் திறக்கவேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியையும் விவசாயிகள் எழுப்புகின்றனர்.
“தடுப்புகளுக்கே ரூ.5 கோடி... பாதுகாப்புக்கு 5,500 போலீஸார்!”
இது குறித்து நம்மிடம் பேசிய பொதுப்பணித்துறை உயரதிகாரி ஒருவர், “அடுத்த 45 நாள்களுக்குத் தேவையான தண்ணீர்தான் இருப்பில் இருக்கிறது. அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டிய பிறகு திறந்தால்தான் பொங்கல் அறுவடைக்குச் சரியாக இருக்கும் என்று தெரிவித்தோம். ஆனால், கடைசி நேரத்தில், `செப்டம்பர் 1-ம் தேதி முதல்வர் விஜய் நேரில் வந்து திறக்கிறார்; ஏற்பாடுகளைச் செய்யுங்கள்’ என்றனர்.
அதற்காக, மேட்டூர் கோட்டாட்சியர் அலுவலகம் முதல் அணைக்கட்டு வரை சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டன. வழக்கமான 2 ஆயிரம் போலீஸாருக்கு பதிலாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். தற்காலிகத் தடுப்புகளுக்கே 5 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகியிருக்கும். போக்குவரத்து, போலீஸாருக்கான உணவு உள்ளிட்ட செலவுகளையும் சேர்த்தால் கணக்கு பல கோடிகளைத் தாண்டும். ஒரு மணி நேர வருகைக்காக இதுவரை எந்த முதல்வருக்கும் இவ்வளவு செலவு செய்யவில்லை’’ என்றார்.
காவல்துறை அதிகாரி ஒருவர், “ஒரு ஐ.ஜி., 4 டி.ஐ.ஜி-க்கள்., 15 எஸ்.பி-க்கள்., 15 கூடுதல் எஸ்.பி-க்கள்., 35 டி.எஸ்.பி-க்கள் உட்பட 5,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையே மிஞ்சும் அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்கப்பட்டது. 50 கிலோமீட்டர் தொலைவுக்குத் தொண்டர்களும் ரசிகர்களும் நிற்பார்கள் என எதிர்பார்த்தனர். ஆனால், மேட்டூரை ஒட்டிய பகுதிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது” என்றார்.
“புஸ்ஸி ஆனந்த்துக்கு ரூ.10 கோடி தருகிறோம்!”
கல்லணை கால்வாய் உழவர்கள் கூட்டமைப்புத் தலைவர் மாரியப்பன், “சம்பா சாகுபடிக்குத் தண்ணீர் திறக்கும்போது அணை நீர்மட்டம் 100 அடியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் 120 நாள்கள் தொடர்ந்து தண்ணீர் திறக்க முடியும். ஆனால், 90 அடி நீர்மட்டத்திலேயே கருத்துக்கேட்புக் கூட்டமின்றி, விளம்பரத்துக்காகத் தண்ணீர் திறந்திருக்கிறார்கள். இதை நம்பி நெல் பயிரிட்டால் விவசாயிகள் நட்டாற்றில் நிற்பார்கள்” என்றார்.
கீழ்பவானி பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி, “சிட்டுக்குருவிக்குப் பட்டம் கட்டினால் சட்டி, பானைகளை உடைக்கும் என்பார்கள்; அணை திறப்பு கூத்து அதைத்தான் நினைவூட்டுகிறது. அடுத்த 45 நாள்களுக்குத்தான் தண்ணீர் இருக்கும் நிலையில், அதற்குள் எந்த நெல் விளையும்... `கர்நாடகாவிலிருந்து உரிய காவிரி நீரைப் பெறுவோம்’ என்பது கானல் நீர்தான். செழிப்பான காலத்திலேயே தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா, இக்கட்டான எல்-நினோ காலகட்டத்தில் தரும் என நம்புவது அபத்தம். உரிய தண்ணீரை கர்நாடகாவிலிருந்து பெற்றுவிட்டால், நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்துக்கு 10 கோடி ரூபாய் தருகிறோம்” என்று சவால் விடுத்தார்.
செலவு விவகாரம் குறித்து சீமான், “மேட்டூர் அணையைக் கட்டவே சுமார் 6 கோடி ரூபாய்தான் செலவாகியிருக்கும். ஆனால், அணையில் நீரைத் திறக்க முதல்வர் நேரில் வந்து பொத்தானை அழுத்துவதற்கு மக்கள் வரிப்பணத்தில் 6 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது” என்று விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக த.வெ.க-வின் அமைச்சர்களும், அரசுத் தரப்பில் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளும் வாய் திறக்க மறுக்கின்றனர்.
`போதிய நீர்வரத்து உறுதி செய்யப்படாத நிலையில், சாகுபடியைத் தொடங்குவது பெரும் சூதாட்டமாகிவிடும்’ என்ற விவசாயிகளின் அச்சத்துக்கு அரசு என்ன பதில் சொல்லப்போகிறது?
