Politics
“போடு... பழியைப் போடு” - Trigger முதல்வர்... திணறும் தி.மு.க!

முதல்வராகப் பொறுப்பேற்று நூறு நாள்களைத் தாண்டியும், இதுவரை பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை முதல்வர் விஜய். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு அமைச்சர்கள் மூலமாகவும், அறிக்கைகள் வாயிலாகவும் பதிலளிக்கப்படுகிறது.
“எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு, திங்கள்கிழமை பதிலளிக்கிறேன். யாரும் எழுந்து ஓடிவிடக் கூடாது...’’ என பட ரிலீஸுக்கு முன்பான டிரெய்லர்போல, சட்டமன்றத்தில் கடந்த வாரமே ‘ஹைப்’ ஏற்றிச் சென்றிருந்தார் முதல்வர் விஜய். அவரின் கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்கள், எம்.எல்.ஏ-க்கள் அனைவரும், “சட்டமன்றத்தில் மாஸ் காட்டப் போகிறார் அண்ணன்...” என்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரைக்கு முன்பாக திரி கொளுத்தினர். சட்டம்-ஒழுங்கு குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு முதல்வரின் பதில் என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக்கும் இருந்தது. ஆனால், வழக்கம்போல பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க-வை ட்ரிக்கர் ஆக்கிவிட்டு, எஸ்கேப்பாகியிருக்கிறார் முதல்வர் விஜய்.
“தி.மு.க மாஜிக்கள் ஓடு ஓடு ஓடு என ஓடுகிறார்கள்” என விமர்சித்த முதல்வர் விஜய், சட்டம்-ஒழுங்கு குறித்து, பொறுப்பாக பதிலளிக்க வேண்டிய நேரத்தில், “போடு... பழியைப் போடு” என தி.மு.க-மீது பழி போட்டுத் தப்பித்திருக்கிறார். 75 வருட பவளவிழா கண்ட கட்சியான தி.மு.க-வும் என்ன செய்வதெனத் தெரியாமல் திணறுகிறது.
முதல்வருக்கு ‘டூப்’ - டேக் டைவர்ஷன் டெக்னிக்!
த.வெ.க-வின் ‘டேக் டைவர்ஷன்’ டெக்னிக்கை, கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதியே போட்டுடைத்துவிட்டார் பொதுப்பணித்துறை அமைச்சரான ஆதவ் அர்ஜுனா. அன்று பனையூரில் நடந்த த.வெ.க எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டத்தில், “இனி உதயநிதியின் கேள்விக்கு அண்ணன் விஜய் எழுந்து பதில் சொல்ல வேண்டாம். நான் இருக்கிறேன். அண்ணன் செங்கோட்டையன், தம்பி ரமேஷ் இருக்கிறார்கள். நாம் பதில் சொல்லிக்கொள்ளலாம். தமிழக மக்களால் தனிப்பெரும் கட்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட த.வெ.க தலைவர் பதில் சொல்லவேண்டிய அவசியமே கிடையாது. இதைத் தீர்மானமாகவே போட வேண்டும். வளர்ச்சியை நோக்கிய அரசியலைத் தலைவர் உருவாக்கட்டும்’’ எனப் பேசியிருந்தார். அப்போதே, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதல்வர் பதிலளிக்கப்போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது.
தி.மு.க., அ.தி.மு.க-வைத் தவிர்த்து த.வெ.க-வுக்குப் பெரும்பாலானவர்கள் வாக்களித்ததற்குக் காரணமே ஒரு மாற்றத்துக்காகத்தான். `விஜய்’ எனும் ஒற்றை முகத்தை நம்பித்தான், வேட்பாளர் பெயரைக்கூட அறிந்துகொள்ளாமல் பெருவாரியாக வாக்களித்தனர் மக்கள். ஆனால், சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி எழுப்பும் கேள்விகளுக்கு முதல்வர் பதிலளிப்பதே தேவையில்லாத வேலை என்று அமைச்சர் பேசியது அதிர்ச்சியை உண்டாக்கியது.
நம்மிடம் பேசிய எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் சிலர், “முதல்வரின் துறைகளுக்கு மட்டுமல்லாமல், பெரும்பாலான விஷயங்களுக்கு அமைச்சர்கள் ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் போன்றவர்களே எழுந்து பதில் கூறினர். நகராட்சி நிர்வாகத்துறை முதல்வர் வசமிருக்கிறது. அந்தத் துறைக்கு முதல்வர்தான் பதிலுரை வழங்க வேண்டும். ஆனால், முதல்வருக்கே டூப் போட்டதுபோல, அமைச்சர் ராஜ்மோகன் பதிலுரை வழங்கினார். முதல்வரைப் புகழ்வதோடு மட்டுமல்லாமல், பேச வந்த விஷயத்தை மடைமாற்றம் செய்து, தி.மு.க-வை ட்ரிக்கர் செய்யும் அரசியலையே மூவரும் கையில் எடுத்தனர்.
மின்சாரத்துறை குறித்துக் கேள்வி எழுப்பினால், பதில் சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், ‘கரூர் கம்பெனி’ என தி.மு.க-வை ட்ரிக்கர் செய்தார் அமைச்சர் நிர்மல் குமார். பரந்தூர் குறித்துப் பேசினால், ‘ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை’ என ட்ரிக்கர் செய்தார்கள். போதாகுறைக்கு அமைச்சர் வன்னி அரசு, எம்.எல்.ஏ மதார் பதுருதீன் உள்ளிட்டவர்கள் மூலமாகவும் தி.மு.க-வினரைக் கோபமடையச் செய்யும் வகையிலும் த.வெ.க நடந்துகொண்டது. இவையெல்லாம் எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல் தானாக நடந்ததாகத் தெரியவில்லை.
ஆபரேஷன் சர்க்காரியா... வாய்ப்பளிக்காத சபாநாயகர்!
சட்டம் - ஒழுங்கு குறித்து, இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. அது குறித்து முதல்வர் வாய் திறக்கவே இல்லை. இன்னும் சொல்லப்போனால், கடந்த செப்டம்பர் 3-ம் தேதி காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போதுகூட, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு, அமைச்சர் ஆனந்த் எழுந்து பதில் சொன்னார். அப்போது, ‘முதல்வர் பதில் சொல்ல மாட்டாரா...’ என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வியெழுப்ப, ‘திங்கள்கிழமை பதில் சொல்வார்’ என்றார் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்.
முதல்வரும், ‘யாரும் ஓடிவிடக் கூடாது...’ எனச் சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு, அவையைவிட்டு அவர் முதலில் வெளியேறினார். அன்று மட்டும், இரண்டு மணி நேரத்துக்கு த.வெ.க - தி.மு.க இடையே வார்த்தை யுத்தம்தான் நடந்ததே தவிர, சட்டமன்றத்தில் பேசவேண்டிய விஷயங்கள் பேசப்படவில்லை. அது குறித்து, தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுட்டிக்காட்டிய பின்னரும்கூட நிலைமை சீராகவில்லை. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலளிப்பதாகச் சொன்ன முதல்வர், தன்னுடைய பதிலுரையில் மீண்டும் எதிர்க்கட்சிகளைச் சீண்டிவிட்டு வேடிக்கை காட்டியிருக்கிறார்.
கடந்த 116 நாள்களில், 200 கொலைகள், 300 பாலியல் வன்கொடுமைகள் என 550 குற்றச் செயல்கள் நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அதற்குரிய பதில்களை மட்டும் சொன்னால், இந்த ஆட்சியின் இயலாமைகள் தெரிந்துவிடும். குறிப்பாக, போதைப்பொருள்கள் நடமாட்டம், குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பது வெட்ட வெளிச்சமாகிவிடும். அதை திசைதிருப்ப, வழக்கம்போல தி.மு.க-வைக் கோபப்படுத்தும் அரசியலைக் கையிலெடுத்தார் முதல்வர் விஜய்.
டாஸ்மாக் முறைகேட்டில், தி.மு.க மேலிடத்துக்கு இருக்கும் தொடர்புகளை அம்பலப்படுத்தி அமலாக்கத்துறை அளித்திருக்கும் தரவுகளைச் சட்டமன்றத்தில் பேசிய முதல்வர், ‘ஆதாரம் கேட்டீங்களே... இது போதுமா...’ என்று பன்ச் டயலாக் பேச, அவையே சூடானது. சர்க்காரியா கமிஷன், மிசா விஷயங்களையும் முதல்வர் காரசாரமாகப் பேசவும், தி.மு.க-வினர் ட்ரிக்கர் ஆகிவிட்டனர். சபாநாயகரும் எதிர்க்கட்சியினர் பேச வாய்ப்பு தரவில்லை. அவைக்குள் தர்ணா போராட்டம் நடத்தியும் சபாநாயகர் இறங்கி வராததால், திணறிவிட்டது தி.மு.க. `சபைக் காவலர்களைவிட்டு வெளியேற்ற உத்தரவிடுவேன்’ என்று சபாநாயகர் சொன்னதும், வேறு வழியில்லாமல் தி.மு.க-வினர் வெளிநடப்பு செய்தனர். அதைத்தான் த.வெ.க-வும் எதிர்பார்த்தது.
‘ஓடக் கூடாது எனச் சொன்னோம், ஆனால் பாருங்கள் ஓடிவிட்டார்கள்’ என்று சமூக வலைதளங்களில் கிண்டலடித்து, தி.மு.க-வை ட்ரோல் செய்தது விர்ச்சுவல் வாரியர்ஸ் படை. இந்த நேரத்தில் அ.தி.மு.க-வைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்கிற யுக்தியாகத்தான், ஜெயலலிதாவுக்குக் கடந்தகாலத்தில் நிகழ்ந்த சம்பவங்களைச் சுட்டிக்காட்டிப் பேசியிருக்கிறார் முதல்வர் விஜய். ஆக மொத்தத்தில், தி.மு.க-வை ட்ரிக்கர் செய்து அவர்களை அடக்கும் யுக்தியைத்தான் கையாளுகிறார்களே தவிர, ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை’’ என்கிறார்கள்.
“வீண் வம்பிழுக்கிறார் முதல்வர்!”
த.வெ.க-வின் இந்த ட்ரிக்கர் அரசியல் தி.மு.க மேலிடத்துக்குப் புரியாமல் இல்லை. ஆனாலும், மீண்டும் மீண்டும் அமைச்சர்கள் வைக்கும் பொறியில் சிக்கிக் கொள்கிறார்கள் தி.மு.க-வினர்.
நம்மிடம் பேசிய தி.மு.க-வின் முன்னணி நிர்வாகி ஒருவர், “செப். 3-ம் தேதியே கேள்வி நேரத்தை ரத்துசெய்துவிட்டனர். இதனால், உறுப்பினர்கள் கேள்வியே கேட்க முடியாத சூழல் உருவானது. கலைஞர், மாறன் குறித்துப் பேசினால் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள் எனத் தெரிந்துதான், வீண் வம்பிழுத்திருக்கிறார் முதல்வர் விஜய். ‘தி.மு.க-வினர் மோசமான அரசியலைச் செய்கிறார்கள்’ என்கிற தோற்றத்தை உருவாக்கப் பார்க்கிறது த.வெ.க. அவர்களிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்பதால்தான், தி.மு.க-வைச் சீண்டும் வேலையைச் செய்கிறார்கள். காமராஜர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்த எங்களால், சபை மரபுகளை மீறிச் செயல்படும் இவர்களை எதிர்த்து அரசியல் செய்வது கொஞ்சம் சிக்கலாகத்தான் இருக்கிறது’’ என்கிறார்.
நிர்வாகரீதியான விஷயங்களைக் கற்றுக்கொள்ள, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கால அவகாசம் கேட்ட முதல்வர், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை திசைதிருப்பிவிடும் அரசியலை மட்டும் சீக்கிரமே கற்றுக்கொண்டுவிட்டார். அதனால், பாதிக்கப்படப்போவது எதிர்க்கட்சிகள் அல்ல, தமிழ்நாட்டின் எதிர்காலம்தான் என்பதை உணர்வாரா முதல்வர்?
