Politics
“காலை உணவுத் திட்ட விரிவாக்கம் எப்போது?” - வெளியான முக்கியத் தகவல்!

தமிழகத்தில் தற்போது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்குக் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை விரிவுபடுத்தி, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கப்படும் எனத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். அதோடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று தமிழ்நாடு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான தொடக்க விழாவை வரும் 22ஆம் தேதி (22.09.2026) முதலமைச்சர் விஜய் சென்னையில் தொடங்கி வைக்க உள்ளார். இந்தத் திட்டம் ஏற்கனவே செப்டம்பர் 17 அன்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 22ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. முதலமைச்சர் சென்னையில் தொடங்கி வைக்கும் அதே நாளில், செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தின் விரிவாக்கம் அமலுக்கு வரவுள்ளது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், செங்கல்பட்டு, திருப்பூர் ஆகிய இரு மாவட்டங்களுக்கு மட்டும் இதில் தற்காலிகமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் செயல்பாட்டிற்காக கடந்த11ஆம் தேதியன்று ஒரு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த சோதனை ஓட்டத்தின் போது கண்டறியப்பட்ட குறைபாடுகள் மற்றும் இடைவெளிகளை உடனடியாக சரிசெய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 22 அன்று திட்டம் எவ்வித தடையுமின்றி தடையற்ற முறையில் தொடங்கப்படுவதை உறுதிசெய்ய, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் ஆயத்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறைச் செயலாளர் மு. பல்லவி பல்தேவ், மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)