Arts, culture, entertainment and media
மதுக்கடையை திறக்க மறுத்து பணியாளர்கள் போராட்டம்: டாஸ்மாக் கடும் எச்சரிக்கை

சென்னை: காலி மது பாட்டில் வாங்கும் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, காஞ்சிபுரம், தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில், மது கடைகளை திறக்காமல் நேற்று பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசின், 'டாஸ்மாக்' கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள், மது பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வாங்குவதை தடுக்க, மாதம், 10 ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு, கடை பராமரிப்புக்கு மாத செலவு தொகை உள்ளிட்ட சலுகைகளை, அரசு அறிவித்துள்ளது.
எனவே, கடைகளில் ஆய்வு செய்து, கூடுதல் பணம் வசூலிக்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட மேலாளர்களுக்கு, டாஸ்மாக் உத்தரவிட்டது.
அதன்படி, 2ம் தேதி முதல் கூடுதல் பணம் வசூலித்த பணியாளர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த இரு தினங்களில் மட்டும், 200க்கும் மேற்பட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், காலி மது பாட்டில் வாங்கும் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், சென்னை புறநகர் உட்பட பல இடங்களில் நேற்று முன்தினம் பிற்பகலுக்கு மேல், மது கடைகளை திடீரென மூடி, பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, பெரம்பலுார், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், கடைகளை திறக்க மறுத்து, பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து, டாஸ்மாக் பணியாளர்கள் கூறியதாவது: கூடுதல் பணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், கடையை விட்டு துாரமாக நின்று கொண்டு, யாரோ சொல்வதை கேட்டு, நடவடிக்கை எடுப்பது, எந்த வகையில் நியாயம்?
கடைகளில் காலி மது பாட்டில்களை சேகரிக்கும் பணிக்கான செலவை, பணியாளர்களே செய்கின்றனர். இதற்கு அதிகம் செலவாவதால், காலி மது பாட்டில் வாங்கும் திட்டத்தை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கருவிகள் வாயிலாக, 'ஸ்கேன்' செய்து, காலி பாட்டில் திரும்ப பெறும் பணிக்கு, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளது. இதில், பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்.
எனவே, காலி பாட்டில் வாங்கும் பணியை காரணம் காட்டி, திடீரென கடை களை மூடி போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.