Politics
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல்... முதல் நாளில் டல்: பிரதான கட்சிகள் கடைசி நாளில் தாக்கல் செய்ய திட்டம்

தட்டாஞ்சாவடி இடைத் தேர்தல் அக்., 6ம் தேதி நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை அக்., 9ம் தேதி நடக்கிறது. தேர்தலையொட்டி, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் நேற்று மனு தாக்கல் துவங்கியது.
முதல் நாளான நேற்று மனு தாக்கல் டல் அடித்தது. 11:00 மணி துவங்கி மதியம் 3:00 மணி வரை அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் உட்பட ஒருவர் கூட மனு தாக்கல் செய்யவில்லை.
இருப்பினும் கட்சி மற்றும் சுயேச்சைகள் சார்பில், மனு தாக்கல் செய்வதற்கான மனுக்களை மட்டுமே வாங்கி சென்றனர்.
பொதுவாக நல்ல நாளில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வது வழக்கம். இரண்டாம் நாளான இன்று (10 ம்தேதி)அம்மாவாசை என்பதால், அரசியல் கட்சி வேட்பாளர்கள் அல்லது சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேர்தல் துறை அனைத்து ஏற்பாடுகளையும் முடுக்கிவிட்டுள்ளது.
கட்சிகள் மூவ் இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்., அசோக் ஆனந்த், தி.மு.க., சார்பில் சேது செல்வம், த.வெ.க., கூட்டணி கட்சிகளுடன் அறிவித்துள்ள மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணியில் காங்., வேட்பாளராக நேயம் மக்கள் கழகத்தை சேர்ந்த விநாயகம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
என்.ஆர்.காங்., இதில், அசோக் ஆனந்த், முதல்வர் ரங்கசாமி தனது ஆஸ்தான ஜோதிடரிடம் நல்ல நேரம் குறித்து வாங்கி கொடுத்த பின், இன்று அல்லது கடைசி நாளான 16ம் தேதி மனுதாக்கல் செய்வார்.
தி.மு.க., இடைத் தேர்தலில் எதிர்க்கட்சியான தி.மு.க., சார்பில் யார் போட்டியிடுவார் என்று பலத்த எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், திடீர் திருப்பமாக நேற்று இரவு தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில் கட்சியில் இணைந்த சேது செல்வம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரும்கடைசி நாளான 16ம் தேதி மனு தாக்கல் செய்கிறார்.
காங்.,-த.வெ.க., முடிவு என்ன ஆளும் என்.ஆர்.காங்.,எதிர்க்கட்சி வேட்பாளர் முடிவான நிலையில், 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி'யில் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலுக்கான ஒருங்கிணைந்த பேச்சு வார்த்தை இதுவரை நடைபெறாமல் உள்ளது. அதனால், த.வெ.க., கூட்டணி கட்சிகளுடன் காங்., பேச்சுவார்த்தை முடிந்த பின்னரே வேட்பாளர் விநாயகமும் கடைசி நாளான 16ம் தேதியே மனுத்தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது.
இத்துடன் சுயேச்சை வேட்பாளர்களும் களம் இறங்க முடிவு செய்து, மனுக்களை வாங்கி சென்றுள்ளதால் கடைசி நாளான 16ம் தேதி தேர்தல் அலுவலகம் களை கட்டும்.
நிதானம் காட்டும் காங். , புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், இண்டி கூட்டணி சார்பில் காங்., 16, தி.மு.க., 12, இ.கம்யூ., 1, வி.சி., 1 என, 30 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் தி.மு.க.,வில் 5 எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி பெற்றனர். காங்.,ல் 1 எம்.எல்.ஏ., மட்டுமே வெற்றி பெற்றார். இதனால் இடைத்தேர்தலில் காங்., வெற்றி பெற்றால், அடுத்து வரும் எம்.பி., தேர்தலில் அது பயனளிக்கும் என, அக்கட்சி கருதுகிறது. இதற்காக த.வெ.க., கூட்டணியில் உருவாகியுள்ள 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி'யில் காங்., வேட்பாளரை நிறுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
ஆனால் த.வெ.க., சார்பில் இடைத்தேர்தல் தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெறாமல் உள்ளதால், காங்., என்ன செய்வது என்று புரியாமல் உள்ளது.
கடந்த தேர்தலில் ஏற்பட்ட குளறுபடி போல் இடைத்தேர்தலில் எந்த குளறுபடியும் ஏற்படக் கூடாது என காங்., நிதானம் காட்டி வருகிறது. இதேபோல், தி.மு.க., சார்பில் சேது செல்வம் அறிவிப்புக்கு முன், கடந்த முறை போல் இந்திய கம்யூ., கட்சிக்கு வழங்க தி.மு.க., தலைவர் ஸ்டாலின் விரும்பி உள்ளார்.
இதற்காக கம்யூ., கட்சிகள் சார்பில் யாரும் தி.மு.க.,வை சந்தித்து பேசாததால், தி.மு.க., வேட்பாளராக சேது செல்வம் அறிவிக்கப்பட்டார்.