Religion
வரும் 14ல் விநாயகர் சதுர்த்தி விழா விரைவில் அனுமதி வழங்க கோரிக்கை
ஊத்துக்கோட்டை, செப். 9– விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி, அதற்கான அனுமதிகளை விரைவில் வழங்க வேண்டும் என்ற
விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி, அதற்கான அனுமதிகளை விரைவில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஹிந்துக்கள் வழிபடும் விழாக்களில், விநாயகர் சதுர்த்தி முதன்மையானது. தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுதும் உள்ள ஹிந்துக்கள், விநாயகர் சிலை வைத்து வழிபடுவர்.
இந்தாண்டு, வரும் 14ம் தேதி விநாயகர் சதுர்த்தி நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தெருவிலும், மூன்றடி முதல், 10 அடி வரை சிலைகள் வைத்து வழிபடுவர். ஆட்டம், பாட்டத்துடன் கோலாகலமாக நடைபெறும் இவ்விழாவிற்கு, அரசு அனுமதி பெறுவது கட்டாயம்.
ஒவ்வொரு இடத்திலும் சிலை வைக்க, அந்தந்த இடத்தின் உரிமையாளர்கள், உள்ளாட்சி, நெடுஞ்சாலை, தீயணைப்பு, மின்வாரியம் உள்ளிட்ட பல துறை அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற்று, அதை மாவட்ட ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் சமர்ப்பித்து, அனுமதி கடிதம் பெற வேண்டும்.
சில ஆண்டுகளாக, விநாயகர் சதுர்த்திக்கு முன்தினம் இரவு வரை காத்திருந்து, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அனுமதி கடிதம் வாங்கிச் செல்லும் நிலை உள்ளது. இதனால், விழா ஏற்பாடுகளை கவனிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.
எனவே, கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இந்தாண்டு விழாவிற்கு, இரண்டு நாட்களுக்கு முன் தேவையான முன் அனுமதி கடிதம் பெற்று, சிலை அமைப்பாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.