Politics
டில்லி விடுதி கட்டட விபத்து தலைமறைவு உரிமையாளர் கைது
புதுடில்லி: டில்லியில், ஐந்து மாடி விடுதி கட்டடம் இடிந்து விழுந்து, ஏழு பேர் பலியான சம்பவத்தில், தலைமறைவாக இருந்த கட்டட உரிமையாளர் ஹரிராம் குப்தாவை, ராஜஸ்தானில் டில்லி போலீசார் இன்று( செப்.,07) கைது செய்தனர்.
தலைநகர் டில்லியின் தெற்கு பகுதியில் உள்ள சத்யா நிகேதன் பகுதியில், 50 ஆண்டுகள் பழமையான ஐந்து மாடி கட்டடத்தில், 'ஹாஸ்டல் டேஸ்' என்ற பெயரில், பி.ஜி., எனப்படும் ஆண்களுக்கான விடுதி செயல்பட்டது. 15 அறைகள் கொண்ட இந்த கட்டடத்தில், பல மாநிலங்களைச் சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருந்தனர்.
சில நாட்களாக இந்த கட்டடத்தின் அடித்தளத்தில் பராமரிப்பு பணிகள் நடந்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென கட்டடம் இடிந்து தரைமட்டமா னது. தகவலறிந்த மீட்புப் படையினர், உள்ளூர் மக்களுடன் இணைந்து இரண்டாவது நாளாக இன்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
கட்டட இடிபாடுகளில் சிக்கி, சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியான நிலையில், மீட்கப்பட்ட, 11 பேர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஐந்து பேர், வரும் வழியிலேயே இறந்து விட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.
மீட்கப்பட்டவர்களில், தற்போது மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு டில்லி பா.ஜ., அரசு உத்தரவிட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தலைமறைவாக இருந்த கட்டட உரிமையாளர் ஹரிராம் குப்தா, ராஜஸ்தானின் பிவாடியில் பதுங்கி இருப்பதை டில்லி போலீசார் கண்டறிந்தனர். நேற்று அங்கு சென்று அவரை கைது செய்து டில்லி அழைத்து வந்தனர்.