Sport
நீச்சல் குளத்தில் சீறிப் பாய்ந்த மாணவர்கள்... விழுப்புரத்தில் விறுவிறுப்பான போட்டி

விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 9 அன்று தொடங்கின.
விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 9 அன்று தொடங்கி நடைபெற்று வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என ஐந்து பிரிவினருக்காக மாவட்ட அளவில் 25 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
முதற்கட்டமாக குழுப் போட்டிகளில் கபடி மற்றும் தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 10 அன்று மாவட்ட அளவிலான நீச்சல் போட்டிகள் நடத்தப்பட்டன. விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அரசு விளையாட்டு மைய நீச்சல் பயிற்சி மையத்தில் காலை 10 மணிக்கு போட்டிகள் தொடங்கின. நீச்சல் போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் தொடங்கி வைத்தார். நீச்சல் பயிற்சியாளர்கள், உடற்கல்வி ஆசிரியர் வசந்த் மற்றும் தேர்வுக் குழுவினர் இணைந்து போட்டிகளை நடத்தினர். முதல் நாளான அன்று பள்ளி மாணவர்களுக்கான நீச்சல் போட்டிகள் நடைபெற்றன.
இந்த நீச்சல் போட்டிகளில் 12 வயதுக்கு மேற்பட்ட, 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். மொத்தம் 150 மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர். ஃப்ரீஸ்டைல், பேக்ஸ்ட்ரோக், பிரஸ்ட் ஸ்ட்ரோக், பட்டர்ஃப்ளை மற்றும் தனிநபர் நீச்சல் உள்ளிட்ட 10 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள், மாணவிகள் என தனித்தனி பிரிவுகளிலும், குழு மற்றும் தனிநபர் பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெற்றன. ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது நீச்சல் திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டிகளின் நிறைவில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பெற்றவர்களுக்கு 3,000 ரூபாய், இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு 2,000 ரூபாய், மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு 1,000 ரூபாய் பரிசுத் தொகையுடன் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதாகவும், இதுபோன்ற போட்டிகள் மூலம் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பல்வேறு சாதனைகளைப் படைக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.
