Sport
முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்; உச்சி வெயிலில் உணவு, ஜூஸ் இல்லாமல் தவிக்கும் மாணவர்கள்!

தமிழ்நாட்டில் விளையாட்டின் மீதான ஆர்வத்தை மேம்படுத்தவும் இளைஞர்களை நல்வழிக்கு கொண்டு செல்லும் முயற்சியாக கடந்த காலங்களில் இருந்து தமிழ்நாடு அரசு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பரிசுகளும், பதக்கம், சான்றிதழ்களும் வழங்கி வருகிறது. மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் உயர்கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டிற்கு ஏற்றுகொள்ளப்படுகிறது.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று 9 ந் தேதி தொடங்கி 28 ந் தேதி வரை நடக்கிறது. பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த போட்டிகளில் பங்கு பெற சுமார் 73,878 வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கம், மாமன்னர் கல்லூரி மைதானம், ஐடிஐ மைதானம் என பல இடங்களிலும் போட்டிகள் நடக்கிறது. இன்று முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடந்த விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் அருணா தொடங்கி வைத்தார்.
விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் குணசேகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் தங்கராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். முதல் நாள் விளையாட்டுப் போட்டியில் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். ஆனால் இந்த விளையாட்டு மாணவர்களுக்கு ஜூஸ் மற்றும் மதிய உணவு எதுவும் கிடைக்காமல் கொளுத்தும் உச்சி வெயிலில் உடல் சோர்வோடு விளையாடி வருகின்றனர்.
போட்டியில் பங்கேற்றுள்ள விளையாட்டு மாணவர்கள் நம்மிடம், ‘கடந்த ஆண்டு வரை முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் போது விளையாட்டு வீரர்களுக்கு தண்ணீர், பழரசங்கள், மதிய உணவு வழங்கினார்கள். அதை நினைத்து மதிய உணவு இல்லாமல் வந்திருக்கிறோம். ஆனால் இங்கே கலெக்டரும், சிஒவும் சொன்னதால் தண்ணீர் மட்டும் வைத்திருக்கிறார்கள். உணவும் இல்லை, பழரசமும் இல்லை. அடிக்கிற வெயிலில் எப்படி விளையாடுவது’ என்று வேதனையை வெளிப்படுத்தினர். இது குறித்து போட்டிகளை நடத்தும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்கள் கூறும் போது, ‘எங்களுக்கு அரசு நிதி ஒதுக்கவில்லை. போட்டி நடத்தும் அலுவலர்களுக்கு மட்டும் உணவு மற்றும் ஜூஸ் வழங்க தான் நிதி ஒதுக்கீடு கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு உணவு வழக்குகிறோம். ஆனால் மற்ற வீரர்களுக்கு உணவு இல்லை பிஸ்கட் பாக்கெட் தான் கொடுக்கிறோம். கடந்த ஆண்டுகளில் ஸ்பான்சர் பெற்று உணவு கொடுத்திருக்கிறார்கள்’ என்றனர்.
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உணவு, தண்ணீர் இல்லாமல் விளையாடும் மாணவர்களில் உடல் நிலை என்னாகும்? கடந்த காலங்களைப் போல விளையாட்டு வீரர்களுக்கு உணவு, பழரசம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசும் கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர் விளையாட்டு வீரர்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)