Sport
தீப்பந்தம் சுழற்றி மிரட்டிய மாணவ-மாணவிகள்... கோலாகலமாக தொடங்கிய முதலமைச்சர் கோப்பை போட்டிகள்

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் 21-ம் தேதி வரை நடைபெற உள்ளன.
தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின. இதனை மாவட்ட ஆட்சியர் ரேவதி தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் மாணவ, மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய வீரத் தற்காப்புக் கலைகளான சிலம்பம், வாள்வீச்சு, மான்கொம்பு, கத்திச்சண்டை, கட்டைக்கால் சிலம்பம், தீப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை நிகழ்த்திக் காட்டி அசத்தினர். குறிப்பாக, தீப்பந்தம் ஏந்தி சிலம்பம் சுழற்றிய மாணவர்களின் சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் 21-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் 13 வயது முதல் 35 வயது வரையிலான கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுப்பிரிவினர் பங்கேற்க உள்ளனர். இதற்காக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
தொடக்க விழாவிற்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியர் ரேவதியை மாணவ, மாணவிகள் சிலம்பம் சுழற்றி உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து, தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலைகளை சிறப்பாக நிகழ்த்திக் காட்டிய மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.
