Politics
'மிசா வரலாற்றைக் கொச்சைப்படுத்தும் அமைச்சர் பெங்களூரில் படித்த லட்சணம் இதுதானா?'-விளாசும் வழக்கறிஞர் துரை அருண்

தமிழகத்தில் சமூக நீதிப் பேரணிகளுக்கும் திராவிட இயக்கத் தலைவர்களின் விழாக்களுக்கும் காவல்துறை மூலம் மறைமுகத் தடைகள் விதிக்கப்படுவது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் துரை அருண் நக்கீரன் டிவிக்கு கொடுத்த நேர்காணலில் அவருடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது,"ஈரோட்டில் பெரியார் பிறந்தநாள் பேரணிக்கும், குடியாத்தத்தில் அண்ணா பிறந்தநாள் பேரணிக்கும் இந்த அரசு முதலில் அனுமதி மறுத்தது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் இருப்பதால் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை வரும் என்று காரணம் சொன்னார்கள். ஆனால், ஆசிரியர் கி.வீரமணி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்தவுடன், தங்களின் முகத்திரை கிழிந்துவிடுமோ என்று பயந்து 'அனுமதி கொடுத்துவிட்டோம்' என்று காவல்துறை மூலம் பல்டி அடிக்கிறார்கள்.
கொள்கைத் தலைவர்கள் என்று வாயளவில் கூறிக்கொண்டு, இவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பாணியிலேயே நீடிக்கின்றன. இன்னொரு பக்கம், தற்போதைய சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், முன்னாள் முதலமைச்சர்கள் மிசா சட்டத்தின் கீழ் சிறைக்குச் செல்லவில்லை, தாக்கப்படவில்லை என்று பொதுவெளியில் பொய்களைப் பேசி வருகிறார். மிசா என்பது எவ்வளவு கொடூரமான சட்டம் தெரியுமா? சாதாரணக் கைதிகளுக்கு வழங்கப்படும் கைது தகவல் கூட மிசா கைதிகளின் குடும்பத்தினருக்குத் தரப்பட மாட்டாது.
வக்கீலோ, சொந்தங்களோ பார்க்க முடியாது. அந்தச் சட்டத்தின் கீழ் அன்றைக்கு மு.க.ஸ்டாலின் போன்ற தலைவர்கள் சிறையில் கொடூரமான கஸ்டடி டார்ச்சரை அனுபவித்து வதைக்கப்பட்டதை இஸ்மாயில் கமிஷன் அறிக்கைகள் தெளிவாகக் கூறுகின்றன. அந்த வரலாற்றுத் தியாகங்களை இழிவுபடுத்துவது மிக மோசமான அரசியல் புத்தி. பெங்களூரிலும் ஆந்திராவிலும் பணம் கொடுத்து அட்மிஷன் போட்டு, கல்லூரிக்குக் கூடப் போகாமல் வெறும் தேர்வு மட்டும் எழுதிவிட்டு வந்த நிர்மல்குமார் போன்றவர்களுக்குச் சட்டத்தின் ஆழமும், எவிடன்ஸ் ஆக்ட் மற்றும் அரசியல் சாசனத்தின் முக்கியத்துவமும் எப்படித் தெரியும்?
நீதிமன்றத்தில் ஒரு நாள் கூட வாதாடாத இவர்களுக்கு மிசா, தடா, பொட்டா போன்ற கொடூரச் சட்டங்களின் வலி புரிய வாய்ப்பில்லை. தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 1990 முதல் மதவாத அரசியலைச் செய்து வருகிறார்கள். சிதம்பரத்தில் தலித் மக்கள் விநாயகர் ஊர்வலம் நடத்த ஆதிக்கச் சக்திகள் தடை விதித்தபோது ஓடி ஒளியும் இந்து முன்னணி அமைப்புகள், இஸ்லாமியர்களுக்கு எதிராக மட்டுமே கலவரத்தைத் தூண்டப் பார்க்கிறார்கள். ஏழை எளிய விளிம்புநிலை இளைஞர்களைத் தங்களின் அரசியல் பகடைக்காய்களாகப் பயன்படுத்தும் இந்த மதவாத சக்திகளின் பின்னாலும், இந்த 'ரீல்ஸ்' அரசின் பின்னாலும் தமிழ்நாட்டு இளைஞர்கள் செல்ல மாட்டார்கள்" என்று துரை அருண் உறுதியாகத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)