Politics
“முதலமைச்சர் விஜய் யாரைத் திருப்திப்படுத்த இதைச் செய்கிறார்?” - உதயநிதி சரமாரி கேள்வி!

தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் செப்டம்பர் 17-ஆம் தேதி திராவிடர் கழகம் சார்பிலும், குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.கழகம் உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும் பேரணிகள் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தன. இருப்பினும், விநாயகர் சதுர்த்தி பண்டிகையைக் காரணம் காட்டி காவல் துறையினர் இந்த அண்ணா பிறந்தநாள் பேரணிக்குத் தொடக்கத்தில் அனுமதி மறுத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ள்ன
இந்நிலையில் இது தொடர்பாகத் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் தி.க. சார்பில் செப்டம்பர் 17ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும், குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.கழகம் உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருந்த பேரணிக்கும், இந்த சர்க்கஸ் (Circus) அரசின் காவல்துறை அனுமதி மறுத்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, வலதுசாரி அமைப்புகளின் பேரணிகளுக்கு அனுமதி வழங்கிவிட்டு, தமிழ்நாட்டை செதுக்கிய பெரியார்- அண்ணாவின் பிறந்த நாள் பேரணிகளுக்கு அனுமதி மறுப்பது ஏன்?. பெரியாரையும், அண்ணாவையும் கொள்கைத்தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர், யாரை திருப்திப்படுத்த இதைச் செய்கிறார்?. காவல்துறை, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லை அவரது காவி எஜமானர்களின் கட்டுப்பாட்டிற்கு (Control) சென்றுவிட்டதா?. பெரியார் - அண்ணாவை புறக்கணிக்கும் ரீல்ஸ் (Reels) முதலமைச்சர், அவருடைய அடிமைத்தனத்தையும் - ஆணவத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, உடனே இந்த பேரணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)