Sport
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி துவக்கம்: 78,346 வீரர்-வீராங்கனையர் பங்கேற்பு
விழுப்புரம்: விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கியது.
தமிழகத்தில், விளையாட்டு வீரர்களின் திறமைகளை மேம்படுத்தும் விதத்தில், ஆண்டு தோறும் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, இந்தாண்டுக்கான முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி, விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேற்று துவங்கியது. முதல் நாளானே நேற்று, பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் பங்கேற்று, ஓட்டம், கைப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகளை துவங்கி வைத்து, பார்வையிட்டார்.
கூடுதல் கலெக்டர் ஆனந்த்குமார்சிங் முன்னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன் தலைமையிலான குழுவினர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.
முதல் நாள் போட்டியில், பள்ளி மாணவர்களுக்கான 100., மீ, 1500 ஓட்டம், கபடி, வாலிபால், கூடைப்பந்து, கைப்பந்து, சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.
இதில், 3 ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்டனர். காலை 7:00 மணிக்கு தொடங்கி மாலை 6:00 மணி வரை போட்டிகள் நடந்தன.
45 வகை போட்டிகள் இதைத்தொடர்ந்து வரும், 26ம் தேதி வரை, தடகளம், கூடைப்பந்து, கபடி, கையுந்துப்பந்து, கைப்பந்து, கோ-கோ, கால்பந்து, தடகளம், கிரிக்கெட், சிலம்பம், நீச்சல், இறகுபந்து, மேசைப்பந்து, கேரம், செஸ், ஹாக்கி, பூப்பந்து, யோகா, எறிப்பந்து, ஸ்பீட் ஸ்கேட்டிங் போன்ற 45 வகையான போட்டிகள் நடக்கின்றன.
மாவட்ட அளவிலான இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.3000; இரண்டாம் பரிசாக ரூ.2000; மூன்றாம் பரிசாக ரூ.1000; என வழங்கப்படும்.
மாநில அளவில் தனிநபர் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
இப்போட்டிகள், 12-19 வயது பள்ளி மாணவர்கள், 17-25 வயது கல்லூரி மாணவர்கள், 15-35 வயது பொது பிரிவினர், அரசு துறையினர், மாற்றுத்திறனாளிகள் என தனித்தனியாக நடக்க உள்ளது. இப்போட்டிகளில் பங்கேற்க இந்தாண்டு 78,346 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.