Sport
முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி மாவட்டம் முழுவதும் 1700 பேர் பங்கேற்பு
ஊட்டி: ஊட்டி எச்.ஏ.டி.பி., திறந்தவெளி விளையாட்டு மைதானத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் லட்சுமி பவ்யா துவக்கி வைத்து பேசியதாவது:
முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தேசிய அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு இணையாக நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு, வெவ்வேறு புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டு, பள்ளி, கல்லுாரி, மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என, ஐந்து பிரிவுகளில், 45 வகையான 37 விளையாட்டுகள் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தப்படுகிறது.
அதில், முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு, முறையே, 3,000, 2,000 மற்றும் 1,000 ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது. மாநில அளவில் தனிநபர் போட்டியில் முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு, முறையே ஒரு லட்சம் ரூபாய், 75 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில், மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டி, இன்று (நேற்று) துவங்கி, 25ம் தேதி வரை நடக்கிறது. இப்போட்டிகளில் வெற்றி பெற்று, மாநில போட்டிக்கு தொகுதி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதன் துவக்க போட்டியில், பள்ளி ஆண்கள் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில், 93, பெண்கள் பிரிவில், 35; கல்லுாரி ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில், 18, பெண்களுக்கான போட்டியில், 15 பேரும் பங்கேற்றனர்.
கல்லுாரி ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியில், ஒன்பது அணிகள் கொண்ட, 104 பேர், பெண்களுக்கான போட்டியில், ஏழு அணிகள் கொண்ட, 74 பேர், கல்லூரி மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில், 21 அணிகள் கொண்ட 360, பெண்களுக்கான போட்டியில், ஆறு அணிகள் கொண்ட, 101 பேரும் பங்கேற்றனர்.
‘பள்ளி ஆண்கள் ‘கோ-கோ’ போட்டியில், 260, கல்லுாரி ஆண்கள் கிரிக்கெட் போட்டியில், எட்டு அணிகள் கொண்ட, 147 பேர்; பள்ளி மாணவர்கள் கேரம் போட்டியில், 372 பேர், மாணவியர் போட்டியில், 132 பேர்,’ என, மொத்தம், 1,711 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, ஏ.டி.எஸ்.பி., சவுந்தர்ராஜன், மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா உட்பட உடற்கல்வி ஆய்வாளர்கள், பயிற்சியாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.