Sport
CM Trophy 2026: சிலம்பம் சுழற்றிய வீரர்கள்... அமைச்சர் முன்னிலையில் மிரட்டல் பெர்ஃபார்மன்ஸ்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் மொத்தம் 45 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளில் பங்கேற்க ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 47,063 வீரர்-வீராங்கனைகள் விண்ணப்பித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஹெலிபேட் மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜீவ் ஆகியோர் கொடியசைத்து போட்டிகளைத் தொடங்கி வைத்தனர்.
செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்கியுள்ள முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 4-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. முதல் நாளில் கல்லூரி மாணவர்களுக்கான இறகுப்பந்து, கைப்பந்து மற்றும் தடகளப் போட்டிகள் நடைபெற்றன. தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.
மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்-வீராங்கனைகள் மற்றும் அணிகள் அடுத்தகட்டமாக மண்டல மற்றும் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தொடக்க விழாவில் விளையாட்டுத் துறை அலுவலர்கள், அரசு அதிகாரிகள், விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவின் ஒரு பகுதியாக வீரர்கள் சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய வீரக்கலைகளை நிகழ்த்திக் காட்டி அசத்தினர்.
