Arts, culture, entertainment and media
ஸ்ரீ தேவி சொத்து தொடர்பான வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மறைந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த 1988ஆம் ஆண்டு, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 4.77 ஏக்கர் நிலத்தை, சம்பந்த முதலியார் என்பவரின் குடும்பத்தினரிடமிருந்து விலைக்கு வாங்கியுள்ளார். இந்த சூழலில் சம்பந்த முதலியாரின் மகன் சந்திரசேகரனின் இரண்டாவது மனைவி, அவரது மகன் நடராஜன், மகள் சிவகாமி என மூன்று பேர் வாரிசு சான்றிதழ் பெற்று அந்த சொத்தில் தங்களுக்கு பங்கு உள்ளது எனக் கூறி செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை நிராகரிக்கக்கோரி, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மற்றும் அவரது மகள்களான நடிகைகள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகியோர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், முழுமையான விசாரணைக்குப் பிறகே சொத்தின் உரிமை குறித்து முடிவெடுக்க முடியும் என்று தள்ளுபடி செய்திருந்தது. இதை எதிர்த்து, போனி கபூர், ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதை விசாரித்த உயர்நீதி மன்றம் மனுவைத் தள்ளுபடி செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. மேலும் அந்த நீதிமன்றத்தில் ஸ்ரீதேவி குடும்பத்தினருக்கு எதிராக நடந்து வந்த உரிமையியல் வழக்கையும் ரத்து செய்தது. இதை எதிர்த்து சிவகாமி மற்றும் நடராஜன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன், அருண் பள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இரு தரப்பும் சமரச பேச்சு வார்த்தை நடத்த நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் மத்தியஸ்தம் செய்ய ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை நியமித்தும் உத்தரவிட்டனர். இதில் ஒருவேளை, சமரசத் தீர்வு எட்டாமல் போனால் மனு மீது போனி கபூர், ஜான்வி கபூர், குஷி கபூர் உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)