Arts, culture, entertainment and media
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் சொத்து வழக்கு: மத்யஸ்தராக ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம்

- சிறப்பு நிருபர் -: மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்குச் சொந்தமான, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சொத்துக்கு உரிமை கோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், போனி கபூர் குடும்பத்தினரும், மனுதாரர்களும் சமரசப் பேச்சு மூலம் தீர்வு காண, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை மத்தியஸ்தராக நியமித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1988-ல், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 2.7 ஏக்கர் நிலத்தை, சம்பந்த முதலியார் என்பவரது குடும்பத்தினரிடம் இருந்து நடிகை ஸ்ரீதேவி விலைக்கு வாங்கினார். கடந்த, 37 ஆண்டுகளாக அந்தச் சொத்தை ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் அனுபவித்து வருகின்றனர்.
தள்ளுபடி இந்நிலையில், சம்பந்த முதலியாரின் மகன் சந்திர சேகரனின் வாரிசுகளான எம்.சி.நடராஜன் மற்றும் எம்.சி.சிவகாமி ஆகியோர், 37 ஆண்டுகளுக்குப் பின், அந்தச் சொத்துக்கு உரிமை கோரி செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நிராகரிக்க கோரி ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகியோர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். 'முழுமையான விசாரணைக்கு பின்னரே சொத்தின் உரிமை குறித்து முடிவெடுக்க முடியும்' எனக்கூறி, அவர்களின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து கபூர் குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். போலி வாரிசு சான்றிதழ் மூலம் சொத்தை அபகரிக்கும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சிவகாமி மற்றும் நடராஜன் தொடர்ந்த வழக்கை நிராகரித்து, செங்கல்பட்டு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதி மன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, சிவகாமி மற்றும் நடராஜன் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை, நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன் மற்றும் அருண் பள்ளி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வருகிறது.
நேற்று நடந்த வாதங்களின் போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமசந்திரன், ''சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள அந்த சொத்தில், ஐந்தில் ஒரு பகுதி மனுதாரர்களின் தந்தையான சந்திரசேகருக்கு சொந்தமானது.
மனுதாரர்களின் தந்தைக்கு தெரியாமல் அவருடைய சகோதர, சகோதரிகள் முறைகேடாக நிலத்தை விற்பனை செய்து விட்டனர். எனவே, அந்த விற்பனை ஆவணங்களை ரத்து செய்ய வேண்டும்,'' என, வாதிட்டார்.
எதிர்ப்பு போனி கபூர் குடும்பத்தினர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ''1988ல் வாங்கப்பட்ட நிலத்திற்கு, 2025ல் தான் உரிமை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுதாரர்களின் தந்தை உயிரோடு இருந்த காலத்தில் கூட எந்த வழக்கும் தொடரப்படவில்லை. தற்போது சொத்தை அபகரிக்கும் நோக்கிலேயே வழக்கு போடப்பட்டுள்ளது.
''அசல் உரிமையாளரான சம்பந்த முதலியாரின் திருமணத்தை மீறிய பந்தத்தில் பிறந்தவர் சந்திர சேகர் என்பதால், அவர் இந்த சொத்துக்கு முறையான சட்டப்பூர்வ வாரிசு கிடையாது. மனுதாரர்கள் பழைய சர்வே எண்ணை ஆதாரமாகக் கொண்டு வந்துள்ளனர்.
''ஆனால், அந்தச் சொத்து பாகப்பிரிவினை செய்யப்பட்டு, தனித்தனி புதிய சர்வே எண்களுடன் உள்ளது. எனவே, மனுவை நிராகரிக்க வேண்டும்,'' என, வாதிட்டார்.
போனி கபூர் தரப்பு வாதத்தை முழுமையாக ஏற்க மறுத்த நீதிபதிகள், 'இரு தரப்பினரும் ஏன் சமரசமாகச் செல்லக்கூடாது? இரு தரப்பும் அமர்ந்து பேசி சமரசமாக ஒரு தீர்வை எட்டலாமே?' என, கேள்வி எழுப்பினர். 'சொத்தில் மனுதாரர்களுக்கு உரிமையே இல்லாத போது எதற்காக சமரசத்திற்குச் செல்ல வேண்டும்' என, போனி கபூர் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
இருப்பினும், இந்த விவகாரத்தில் மனுதாரர்களுக்குச் சில உரிமைகள் உள்ளதாகத் தெரிவித்த நீதிபதிகள், இரு தரப்பும் பேசி சமரசமாகச் செல்ல அறிவுறுத்தினர். இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை நியமித்து உத்தரவிட்டனர்.
ஒருவேளை சமரசத் தீர்வு எட்டப்படாத பட்சத்தில், இந்த மேல்முறையீட்டு மனுவுக்கு போனி கபூர், ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை டிசம்பர், 18-க்கு ஒத்தி வைத்தனர்.