Politics
சரியான ஆலோசனை தேவை!

“மாநிலத்தில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் எவ்வளவு பாதுகாப்பாகவும் பயமில்லாமலும் வாழ்கிறார்கள் என்பதில்தான் உண்மையான முன்னேற்றம் இருக்கிறது. சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்தால், பெண்களும் இளைஞர்களும் சுதந்திரமாகக் கல்வி, வேலைவாய்ப்புகளில் பங்கேற்பார்கள்” என்று காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் பதிலுரையில் முதல்வர் விஜய் குறிப்பிட்டது நிதர்சனமான உண்மை.
ஆனால், சமீப நாள்களாக நடந்தேறியிருக்கும் சில குற்றச் சம்பவங்கள் தமிழக சட்டம்-ஒழுங்கைக் காக்கும் விஷயத்தில் முதல்வர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. சென்னை அடையாறில் சில வழக்குகளில் தொடர்புடைய ஒருவர், குடியிருப்புப் பகுதியில் பட்டப்பகலில் கொலைசெய்யப்பட்டார். முறையாகக் கண்காணித்திருந்தால், இப்படியொரு சம்பவம் நடந்திருக்காது என்பதால், அந்தப் பகுதியின் இரண்டு போலீஸ் உயரதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். அதேபோல கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கிலும் காவல்துறையின் மெத்தனம் கடும் விமர்சனத்துக்குள்ளானது.
முதல்வர் சொன்னதுபோல, ஒவ்வொரு குற்றத்துக்குப் பின்னணியிலும் பழிவாங்கும் மனநிலை, முன்விரோதம், சொத்துப் பிரச்னை, குடும்பப் பகை, போதையின் தாக்கம் எனப் பல காரணங்கள் இருக்கலாம். ஒரு சில குற்றச் சம்பவங்களை மட்டும் வைத்து, ஒட்டுமொத்த சட்டம்-ஒழுங்கும் கெட்டுவிட்டதாகச் சொல்வதும் சரியல்லதான். ஆட்சிக்கு வந்து 118 நாள்களுக்குள் எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டுவிட முடியாது என்பதும் யதார்த்தமே.
அதேநேரம், தமிழக சட்டம்-ஒழுங்கை மேம்படுத்த முதல்வர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். தமிழக காவல்துறையில் 15,000 இடங்களுக்கு மேல் காலியாக உள்ளன. மேலும், அதிகரித்திருக்கும் மக்கள்தொகை, நகர விரிவாக்கங்களுக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்குவதும் அவசியம்.
சிங்கப்பெண் சிறப்புப் படை, போதைப்பொருள் தடுப்புப் படை எனப் புதிய அமைப்புகளை உருவாக்கினால் மட்டும் போதாது. அவற்றுக்கான புதிய பணியிடங்களை நிரப்ப வேண்டும். பிற பிரிவுகளில் பணியாற்றும் காவலர்களையே பணிமாறுதல் செய்வது பிரச்னைக்கான தீர்வல்ல.
காவல்துறையின் சீரமைப்புக்காக 2022-ல் அப்போதைய தி.மு.க அரசு, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில், 5-வது காவல் ஆணையத்தை அமைத்தது. 2025, ஜனவரியில் அந்த ஆணையம் தனது இறுதி அறிக்கையை வழங்கியது. ஆனால் தி.மு.க அரசு, அந்த அறிக்கையை வெளியிடவில்லை. அப்போதே அதை விகடன் உள்ளிட்ட ஊடகங்கள் சுட்டிக்காட்டிக் கண்டித்தன.
தற்போது சர்க்காரியா கமிஷன் அறிக்கையைத் தூசுதட்டி எடுத்த முதல்வர், காவல்துறை சீரமைப்புக்காக அமைக்கப்பட்ட அந்த ஆணையத்தின் பரிந்துரைகளையும் தூசுதட்டி வாசித்திருந்தால், சட்டமன்ற பதிலுரை இன்னும் மேம்பட்டதாக இருந்திருக்கும்.
`காவல்துறையில் இந்த ஆண்டுக்குள் 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும்’ என்று முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனாலும், வெறும் வார்த்தைகளோடு நிற்காமல், அதற்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும். ‘கடல் பார்த்து அலுவலகம் அமையுங்கள்’, ‘சிறைக்குள் போய் ஆய்வுசெய்யுங்கள்’ என்றெல்லாம் ஆலோசனை சொல்லும் முதல்வரின் சகாக்கள், காவல்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தும் இந்த விஷயத்திலும் ஆலோசனை சொல்ல வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
