Politics
சுதர்சன நாச்சியப்பன் காலமானார்

சிவகங்கை: சிவகங்கையில் காங்., மூத்த தலைவரும், மத்திய முன்னாள் இணை அமைச்சருமான சுதர்சன நாச்சியப்பன் 78, மாரடைப்பால் காலமானார்.
சிவகங்கை மாவட்டம் ஏரியூரை சேர்ந்த இவர் 1999-- 2004 வரை எம்.பி., 2004 - 2016 வரை ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தார். 2013 - 14 ல் மத்திய அரசின் வர்த்தக, தொழில் துறை இணை அமைச்சராக பதவி வகித்தார். உச்சநீதிமன்ற வழக்கறிஞரும் ஆவார்.
2002 ல் காங்., மாநில துணை தலைவர், காங்., கட்சி கொறடா, அகில இந்திய காங்., கமிட்டி செயலாளர் பொறுப்புகள் வகித்தார்.
சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவிலுள்ள வீட்டில் நேற்று முன்தினம் துாங்க சென்றவர், நேற்று காலை எழுந்திருக்கவில்லை. வேலைஆட்கள் எழுப்பிய போதும் எழுந்திருக்காததால் மருத்துமனைக்கு கொண்டு சென்ற போது டாக்டர்கள் துாக்கத்திலேயே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பொதுமக்கள் அஞ்சலிக்காக ஏரியூரில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் விஸ்வநாதன், காங்., மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், கார்த்தி எம்.பி., கட்சியினர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.