Politics
காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரான மாணிக்கம் தாகூர் இவரது அண்ணன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சருமான சுதர்சன நாச்சியப்பன் (80) இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
சிவகங்கை நகரின் சத்தியமூர்த்தி தெருவில் வசித்து வந்த சுதர்சன நாச்சியப்பன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக நீண்டகாலம் செயல்பட்டு வந்தார். நாடாளுமன்ற உறுப்பினராகவும், பின்னர் மத்திய அரசில் வணிகம் மற்றும் தொழில்துறை துறையின் இணை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து தேசிய அரசியலில் தனித்த இடத்தைப் பெற்றவர்.
சுதர்சன் நாச்சியப்பன் நேற்று வழக்கம் போல் உறங்க சென்றபின் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதையடுத்து மருத்துவர்கள் அவரை சோதனை செய்தனர். மாரடைப்பு காரணமாக அவர் உறக்கத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இவருக்கு யமுனா நாச்சியார் என்ற மகளும், ஜெயசிம்மன் நாச்சியப்பன் மற்றும் மாதவன் ஆகிய இரு மகன்களும் உள்ளனர். மேலும், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரான மாணிக்கம் தாகூர் இவரது அண்ணன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவு செய்தி பரவியதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சிவகங்கை மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய அவர், மக்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எழுப்பியவராக அறியப்பட்டார். மன்மோகன் சிங் ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்த காலத்திலும் தொழில் வளர்ச்சி, வணிக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் ஏரியூரில் வைக்கப்பட உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
