Religion
விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி மறுப்பு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பேச்சு
குன்னுார்: குன்னுார் சேலாஸ் சுற்றுவட்டார பகுதிகளில், அகில இந்திய ஹிந்து மகா சபை சார்பில் விநாயகர் சதுர்த்தி சிலை வைக்க அனுமதி அளிக்காதது தொடர்பாக, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடந்தது.
குன்னுாரில், இந்து முன்னணி சார்பில் வரும், 14ம் தேதி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, 18ம் தேதி கரைக்கப்படுகிறது. இதனிடையே, சேலாஸ், மணியாபுரம், கெந்தளா, முசாபுரி, வீரக் கோம்பை, இந்திராநகர், காந்திபுரம் பகுதிகளில், அகில இந்திய இந்து மகா சபை மற்றும் மக்கள் சார்பில் சிலைகள் வைக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் சட்டம் -ஒழுங்கு பிரச்னை என கூறி, போலீசார் அனுமதி அளிக்கவில்லை. அதில், சேலாஸ் பகுதியை சேர்ந்த கிஷோர் என்பவருக்கு நன்னடத்தை பிணை கோரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது.
இதையறிந்த சேலாஸ் பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் கிஷோருக்கு ஆதரவாக குன்னூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் திரண்டனர். பின்னர், கூடுதல் கலெக்டர் காஞ்சன் சவுத்ரியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முடிவில், கிஷோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் சம்மனை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டது.
அப்பகுதியில் இந்து முன்னணியினர் மற்றும் இந்து மகா சபையினர் விநாயகர் சிலைகள் அமைப்பது தொடர்பாக, மாவட்ட எஸ்.பி., மற்றும் டி.எஸ்.பி., ஆகியோர் உரிய முடிவு எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகளின் விளக்கத்தை ஏற்றுகொண்ட மக்கள் கலைந்து சென்றனர்.